ஊழியர்களின் உடல்நலம், நல்வாழ்வில் முதலீடு செய்யும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் இனி, வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம், உள்ளூர் காப்புறுதி நிறுவனமான சிங்லைஃப் இடையேயான புதிய கூட்டு முயற்சியின்கீழ், குழு காப்புறுதிச் சந்தாக்களில் குறைந்த கட்டணத்தைச் செலுத்தலாம்.
வியாழக்கிழமை (ஜூலை 24) நடைபெற்ற ‘முத்தரப்பு இணைப்பு 2025’ (Tripartite Connect 2025) தொடக்க விழாவில் மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் இந்தத் திட்டத்தை அறிவித்தார்.
இலவசமான ‘மொத்த வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றத் திட்டம் (Total WSH Programme) மூலம் தங்கள் ஊழியர்களுக்கு உடல்நலப் பரிசோதனை, வாழ்க்கைமுறை பயிற்சிக்கு பதிவுசெய்யும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு முதலாண்டு காப்புறுதிச் சந்தாக்களில் 10 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும்.
“சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ஒவ்வொரு காசும் முக்கியம். அத்தகைய சேமிப்பை வணிகம் அல்லது ஊழியர்களின் தேவைகளை ஆதரிக்க பயனுள்ள வகையில் பயன்படுத்தலாம்,” என்று திரு தினேஷ் வாசு நிகழ்ச்சியில் கூறினார்.
“இது ஒரு வெற்றி-வெற்றி விளைவாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். காப்புறுதிச் சேமிப்புகளுடன் நிறுவனங்களுக்கும் வெற்றி; சிறந்த ஆரோக்கியம், நலனுடன் ஊழியர்களுக்கும் வெற்றி,” என்றும் அவர் மேலும் சொன்னார்.
மேரியட் டேங் பிளாசா ஹோட்டலில் நடைபெற்ற ‘முத்தரப்பு இணைப்பு’ தொடக்க விழாவில் திரு தினேஷ் வாசு பேசினார். ஏறக்குறைய 330 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்வுக்கு நியாயமான, முற்போக்கான வேலை நியமன நடைமுறைகளுக்கான முத்தரப்புக் கூட்டணியும் பணியிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்தன. இந்த இரண்டு அமைப்புகளும் முத்தரப்புக் கூட்டணி லிமிடெட்டின்கீழ் செயல்படுகின்றன.
திரு தினேஷ் வாசு தமது உரையில் ஓர் உதாரணத்தைக் குறிப்பிட்டார். ஐம்பது ஊழியர்களைக் கொண்ட ஒரு சிறிய, நடுத்தர நிறுவனம் வழக்கமாக அடிப்படைக் காப்புறுதியாக ஒரு நபருக்கு ஆண்டுக்கு ஏறத்தாழ $650 செலவிடும். இந்நிலையில், 10% தள்ளுபடி, முதலாண்டில் $3,250 சேமிப்பாக மாறும்.
இந்தச் சலுகைகள் மார்ச் 31, 2027 வரை கிடைக்கும் என்று சிங்லைஃப் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஊழியர்களின் ஆரோக்கியத்திற்கு அப்பாற்பட்டு, பாதுகாப்பும் நியாயமும் ஒரு நிறுவனத்தின் நற்பெயருக்கும் லாபத்திற்கும் முன்பைவிட முக்கியம் என்பதை திரு தினேஷ் வாசு வலியுறுத்தினார்.
“வலுவான வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார நடைமுறைகளால் சேவை வழங்குதல் சீராக இருக்கும். தடங்கல்கள் குறைக்கப்பட்டு, விலையுயர்ந்த தாமதங்கள் தவிர்க்கப்படும்,” என்று அவர் எடுத்துரைத்தார்.
சிட்டி டிவெலப்மண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தை ஓர் உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், அனைத்து ஒப்பந்ததாரர்களும் குறைந்தபட்சம் ‘பிஸ்ஸேஃப் நிலை 3’ (bizSafe level 3) சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் என்பதை அந்த நிறுவனம் கட்டாயப்படுவதாகச் சொன்னார்.
தங்கள் ஊழியர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்திசெய்ய நியாயமான, முற்போக்கான வேலைவாய்ப்பு நடைமுறைகளைப் பின்பற்றும்படியும் சிறிய, நடுத்தர நிறுவனங்களிடம் திரு தினேஷ் வாசு வலியுறுத்தினார்.

