வெளிநாடுகளில் வாகனங்களை வாடகைக்கு எடுத்து ஓட்டுபவர்களுக்காக, காப்புறுதி மிகைத் தொகை பாதுகாப்பு வழங்கும் புதிய திட்டத்தை சிங்கப்பூர் மோட்டார் வாகனச் சங்கம் திங்கட்கிழமை (பிப்ரவரி 2) தொடங்குகிறது.
‘ரோடுபிளஸ்+’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், சிங்கப்பூரில் வருடாந்தரத் திட்டமாக வழங்கப்படும் இவ்வகையிலான முதல் காப்புறுதித் திட்டமாகும்.
ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு கட்டணம் ஆண்டுக்கு $198லிருந்து தொடங்குகிறது. மற்ற நாடுகளில் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு கட்டணம் ஆண்டுக்கு $268 முதல் தொடங்குகிறது.
இந்தத் திட்டங்கள் ஒருவார காலப் பயணங்களை உள்ளடக்கியவை. தேவைப்பட்டால், முறையே $50யும் $70யும் கூடுதல் கட்டணம் செலுத்தி இன்னும் ஏழு நாள்களுக்குக் காப்புறுதிப் பாதுகாப்பை நீட்டித்துக்கொள்ளலாம்.
காப்புறுதி மிகைத் தொகை என்பது, ஒரு விபத்து ஏற்படும்போது காப்புறுதிப் பாதுகாப்பு பெறுபவர் தமது சொந்தப் பணத்திலிருந்து செலுத்த வேண்டிய ஒரு குறிப்பிட்ட தொகையாகும்.
இது குறித்து சிங்கப்பூர் மோட்டார் வாகனச் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லீ வாய் முன், “அடிப்படையான மோதல் சேதத் தள்ளுபடி வசதிக்கு அப்பாற்பட்டு, ஓட்டுநர்கள் தங்கள் கைக்காசைச் செலவழிப்பதிலிருந்து ரோடுபிளஸ்+ அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குகிறது,” என்றார்.
பொதுவாக, வாடகை கார்களுக்கு வழங்கப்படும் மோதல் சேதத் தள்ளுபடிப் பாதுகாப்புத் திட்டம், விபத்துகளின்போது பழுதுபார்ப்புச் செலவுகளை ஏற்கும்.
இருப்பினும், இது அமலில் இருந்தாலும் காரை வாடகைக்கு எடுப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட மிகைத் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும். மேலும், காரின் அடிப்பகுதி, டயர்கள், சன்னல் கண்ணாடிகளுக்கு ஏற்படும் சேதங்களுக்கு வாடகை நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடும்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது சந்தையில் இத்தகைய வாடகை கார் காப்பீட்டுத் திட்டங்கள் இருந்தாலும், அவை பெரும்பாலும் சிங்கப்பூருக்கு வெளியே உள்ள நிறுவனங்களாலேயே நிர்வகிக்கப்படுகின்றன. மோட்டார் வாகனச் சங்கத்தின் இந்த முயற்சி, உள்ளூர் ஓட்டுநர்களுக்குக் கூடுதல் வசதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

