காணொளிவழி புத்தாண்டு வாழ்த்துகள் கூறிய அதிபர் தர்மன்

கலாசாரங்களின் ஒன்றிணைவு சிங்கப்பூரின் அழகியல் அம்சம்: தர்மன்

2 mins read
a5c5a5e9-be81-49ac-911d-d1b6bbccdc4a
2026 புத்தாண்டுக் காணொளியில் பேசும் அதிபர் தர்மன் சண்முகரத்னம். - படம்: அதிபர் அலுவலகம்
multi-img1 of 2

பல்லின கலாசாரக் கூறுகளை உள்ளடக்கிய உணவான லக்சாவில் பல்வேறு வகைகளை உருவாக்கி ரசிப்பது போலவே, பல கலாசாரங்களின் அழகியலைக் குறித்துக் கற்பதும், அவற்றைக் கொண்டாடுவதும் சிங்கப்பூரின் அழகியல் அம்சமாகும் என்று கூறியுள்ளார் அதிபர் தர்மன் சண்முகரத்னம்.

புத்தாண்டுப் பிறப்பையொட்டி அனைவருக்கும் காணொளிவழி வாழ்த்து தெரிவித்தார் அதிபர் தர்மன்.

‘கெபோன் டாப்போர்’ (Kebon Dapor) பூங்காவின் பின்னணியில் பேசிய அவர், அங்கிருந்த ‘லக்சா’ இலையைச் சுட்டியதுடன், “பெரனாக்கன், சீன, மலாய், இந்திய கலாசாரங்களின் கலவையாக அமைந்த உணவு லக்சா. அதிலும், கேலாங் சிராயில் கிடைக்கும் சிக்லாப் லக்சாவில் தொடங்கி, மீன் சுவைகொண்ட ‘நோன்யா லக்சா’, அசாம் லக்சா எனப் பலவித சேர்க்கைகளால் உருவான பலவித லக்சாக்களைச் சிங்கப்பூரர்கள் விரும்பி உண்கின்றனர். இவ்வகை கலாசார இணைவுகள் நமக்குள் இயற்கையாகவே அமைந்துள்ளன,” என்றார்.

இதனைச் சிங்கப்பூரின் தனிச்சிறப்பாக எடுத்துக்கூறிப் பாராட்டிய அவர், சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்திய பல்வேறு இனத்தைச் சார்ந்த சிலரையும் குறிப்பிட்டுப் பேசினார்.

பாரம்பரிய சீன இசையின் அடிப்படையில் அமைந்த தனித்துவமான இசை வடிவத்தின் மீது பேரார்வம் கொண்ட மலாய் இன இசைக்கலைஞர் நாடியா, இந்தியாவின் ஒடிசி நடனக்கலைமீது ஆர்வம் கொண்ட சீனக் கலைஞர் யோங் என், மலாய் உணவு, சுவைகள்மீது ஈர்ப்பு ஏற்பட்டு தோட்டம் உருவாக்கிய ராஜா முகம்மது ஃபைரூஸ் ஆகியோரைக் குறிப்பிட்டுப் பேசினார்.

பிற கலாசாரங்களின் சிறப்பு அம்சங்களைக் கற்றுத் தேர்ந்து பயணிக்கும் சிங்கப்பூரர்கள் சிலரைக் குறிப்பிட்டு வாழ்த்தினார் அதிபர் தர்மன்.
பிற கலாசாரங்களின் சிறப்பு அம்சங்களைக் கற்றுத் தேர்ந்து பயணிக்கும் சிங்கப்பூரர்கள் சிலரைக் குறிப்பிட்டு வாழ்த்தினார் அதிபர் தர்மன். - படம்: இன்ஸ்டகிராம் (அதிபர் தர்மன்)

சியோங் லெங் இசை சங்க மாணவியான நாடியா, தற்போது சீனப் பாரம்பரிய இசைக்குழுவான ‘நான்யீன்’ குழுவில் பாடகராக உள்ளார். அடிப்படையில் பாடகரான யோங் என், தமது நண்பர்மூலம் ஒடிசி குறித்து தெரிந்துகொண்டு, கற்றுத் தேர்ந்து தற்போது நடனக் கலைஞராக உள்ளார். கட்டடக்கலைத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றும் ராஜா முகம்மது ஃபைரூஸ், மலாய் உணவில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய மூலிகைப் பொருள்கள் குறித்துப் பலரும் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

இவற்றைக் குறித்து விரிவாகப் பேசிய அதிபர் தர்மன், “ராஜா, நாடியா, யோங் போன்றோரின் முயற்சிகள் நமது பன்முகக் கலாசாரத்தை இயற்கையாகவே ஆழப்படுத்த உதவும்,” என்றார்.

சிங்கப்பூரர்கள் பலரும் பிற கலாசாரம் குறித்து அறிந்து, கற்றுக்கொள்ள முயலும்போது, நாம் பகிரும் தனித்துவமான அடையாளத்தின்மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அது நம்மால் இயலும்,” என்றும் புன்னகையுடன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்