ஒருங்கிணைப்பு தற்செயலாக ஏற்படுவதில்லை, அது விருப்பத்துடன் உருவாக்கப்படுகிறது என்று சட்ட அமைச்சரும் உள்துறை அமைச்சுக்கான இரண்டாவது அமைச்சருமான எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.
“அது நோக்கத்துடனே மேற்கொள்ளப்படவேண்டும். எப்போதும் நாம் அதற்கு முன்னுரிமை தரவேண்டும். நமது கவனத்தைப் பெறும் ஒன்றாக அது திகழவேண்டும். அதனைச் சுற்றி நம்மை நாம் கட்டமைத்துக் கொள்ளவேண்டும்,” என்று திரு டோங் வலியுறுத்தினார்.
ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்தில் வியாழக்கிழமையன்று (ஜூன் 26) நடைபெற்ற சமுதாயத்திற்கான அனைத்துலக மாநாட்டின் இறுதி நாளில் திரு டோங், மாநாட்டுக்கான முத்தாய்ப்பு உரையை ஆற்றியபோது இவ்வாறு கூறினார்.
“சமூக ஒருங்கிணைப்பு இயல்பான நிலையில் திகழ்வதில்லை. நம்மைப் போன்றவர்களை நாடும்படி நம் இயல்பான உள்ளுணர்வு கூறுகின்றது,” என்றார் அவர்.
“நம்மைப்போல தோற்றம் உள்ளவர்கள், பேசுபவர்கள், நம் நம்பிக்கைகளைக் கொண்டுள்ளவர்கள், அடிப்படையில் நம் நிழலுரு போன்று இருப்பவர்களுடன் நாம் பழகுகிறோம்,” என்று திரு டோங் கூறினார்.
பலதரப்பட்ட பின்புலங்களையும் நம்பிக்கைகளையும் கொண்ட சமூகத்தில் ஒருங்கிணைப்பு தற்செயலாக உருவாகாது என்றும் அதனை உருவாக்க கடின உழைப்பு தேவை என்றும் திரு டோங் குறிப்பிட்டார் .
“அதற்குக் கவனமாகவும் உழைக்கவேண்டும். அதனைச் சரியாகச் செய்தோமானால் நாம் இணைந்து தரநிலைகளையும் குறிக்கோள்களையும் உருவாக்கலாம். ஒருவரை ஒருவர் சகித்துக்கொள்வது மட்டுமல்லாமல் அரவணைக்கும் சுற்றுச்சூழலையும் உருவாக்கும் நிலையில் நம்மால் இருக்க முடியும்,” என்று அவர் விளக்கினார்.
கொள்கை வகுப்பாளர்கள், சமூக அமைப்பினர், இளந்தலைவர்கள் என 50க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் ஆதரவுடன் எஸ் ராஜரத்னம் அனைத்துலக ஆய்வுப் பள்ளி இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தது.
ஒருங்கிணைப்புமிக்க, பண்பாட்டுப் பன்முகத்தன்மைமிக்க சமுதாயத்தை உருவாக்குவதில் ந்ம் நாடு கடந்து வந்துள்ள பயணத்தின் முக்கிய மைல்கல்லாக, சுதந்திர சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டுநிறைவு திகழ்வதாகத் திரு டோங் குறிப்பிட்டார்.
“திறந்த மனத்துடன் நாம் தொடர்ந்து செல்லவேண்டும் என்பது என் நம்பிக்கை,” என்று திரு டோங் கூறினார்.