தீவிரமடையும் பருவநிலை மாற்றம்; ஆசியான் நாடுகள் இணைந்து செயல்பட அழைப்பு

தீவிரமடையும் பருவநிலை மாற்றம்; ஆசியான் நாடுகள் இணைந்து செயல்பட அழைப்பு

3 mins read
22495971-1e8d-4f83-9977-4c632c4294a1
புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 19) பார்க்ராயல் கலெக்‌ஷன் மரினா பேயில் நடைபெற்ற ‘பேரிடர் நிர்வாகம் தொடர்பான ஆசியான் உத்திபூர்வ கொள்கை உரையாடல் 2026’ மாநாட்டில் சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பருவநிலை மாற்றம் இயற்கைப் பேரிடர்களின் எண்ணிக்கையையும் தீவிரத்தையும் அதிகரித்து வருவதால், அதை எதிர்கொள்ளும் பேரிடர் மீள்திறனை வளர்த்துக்கொள்வது இனி ஒரு தெரிவன்று என்றும் அது கட்டாயத் தேவையாகிவிட்டது என்றும் சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.

இயற்கைப் பேரிடர்களுக்கு எல்லைகள் கிடையாது என்பதால், ஆசியான் உறுப்பு நாடுகளிடையே கூட்டுச் செயல்பாடும் ஒற்றுமையும் மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 19) பார்க்ராயல் கலெக்‌ஷன் மரினா பேயில் நடைபெற்ற ‘பேரிடர் நிர்வாகம் தொடர்பான ஆசியான் உத்திபூர்வ கொள்கை உரையாடல் 2026’ மாநாட்டில் தொடக்க உரையாற்றியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, ஆசியான் செயலகம், ஆசியான் ஒருங்கிணைப்பு மையம் ஆகியவை ஒருங்கிணைத்த இந்நிகழ்ச்சியின் 11வது மாநாட்டில் ஆசியான் நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், கனடா, நியூசிலாந்து ஆகியவற்றைச் சேர்ந்த அரசாங்க அதிகாரிகள், கல்வியாளர்கள், துறைசார் வல்லுநர்கள் என ஏறத்தாழ 200 பேர் கலந்துகொண்டனர்.

தமது உரையில், ‘ஒரே ஆசியான், ஒரே பதில் நடவடிக்கை’ பிரகடனத்தின் 10வது ஆண்டு நிறைவை 2026ஆம் ஆண்டு குறிப்பதை அமைச்சர் டோங் சுட்டினார்.

எந்தவொரு பேரிடருக்கும் ஆசியான் அளிக்கும் பதில் நடவடிக்கையின் வேகம், அளவு மற்றும் ஒற்றுமையை அதிகரிப்பதே இப்பிரகடனத்தின் முக்கிய நோக்கம் என்றும் திறன்களை மேம்படுத்திய போதிலும் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று இந்தோனீசியாவின் ஃபுளோரஸ் தீவு கடலோரப் பகுதியில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்த 53 பேருக்கும் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கும் அமைச்சர் டோங் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார். இந்தோனீசியாவின் தேசியப் பேரிடர் நிர்வாக ஆணையத்தின் துணை அமைச்சர் ராதித்யா ஜாட்டி உரையாற்றியபோது, கூட்டத்தில் பங்கேற்றவர்கள், உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.

மேலும், ‘லூயிஸ்’, ‘மேமே’ ஆகிய சூறாவளிகள் மற்றும் தென்மேற்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள பிலிப்பீன்சுக்கும் அமைச்சர் டோங் இரங்கல் தெரிவித்தார்

மியான்மரின் மத்தியப் பகுதியில் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் தேதியன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாய்லாந்து, வியட்னாம் வரை பாதிப்பை ஏற்படுத்தியதையும் இந்தோனீசியா, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளைச் சூறையாடிய ‘சென்யார்’ சூறாவளியையும் அவர் நினைவுகூர்ந்தார்.

உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ள ‘சூப்பர் எல் நினோ’ காரணமாகத் தென்கிழக்காசியாவில் கடுமையான வெப்ப அலைகளும் வறட்சியும் ஏற்பட்டு, உணவுப் பாதுகாப்புக்கும் பொதுச் சுகாதாரத்துக்கும் பெரிதும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற கவலையையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

சிங்கப்பூர் 2027ஆம் ஆண்டில் ஆசியான் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் டோங், வட்டார அளவிலான பேரிடர் மீட்புப் பயிற்சிகளைச் சோதனை செய்ய 10வது ஆசியான் வட்டாரப் பேரிடர் அவசரகாலப் பதில் நடவடிக்கை பாவனைப் பயிற்சியைச் சிங்கப்பூர் நடத்தும் என்றார்.

மேலும், 2026ஆம் ஆண்டைப் பருவநிலைத் தகவமைப்பு ஆண்டாக அறிவித்துள்ள சிங்கப்பூர், பருவநிலை மாறுபாட்டை எதிர்கொள்ள $40 மில்லியன் நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய தேசியத் திட்டத்தை உருவாக்கி வருகிறது.

பேரிடர் மேலாண்மையில் பேரிடர் நிகழ்ந்த பிறகு செயல்படாமல், முன் கூட்டியே சிந்தித்துச் செயல்படும் தொலைநோக்குப் பார்வையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், ஆசியான் தனது கூட்டு வலிமையை ஆசியான் எல்லைகளைத் தாண்டி அனைத்துலக சமூகத்துக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கூறி அமைச்சர் டோங் தமது உரையை நிறைவு செய்தார்.

குறிப்புச் சொற்கள்
பருவநிலைஎட்வின் டோங்ஆசியான்