தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீவு முழுவதும் சோதனைச் சாவடிகளில் தீவிர நடவடிக்கை

2 mins read
2bf891c3-d070-4282-90b8-a8ba84355c4e
சிங்கப்பூருக்குள் ரொக்கத்தை எடுத்தவந்த வெளிநாட்டுப் பயணி ஒருவரை ஆணைய அதிகாரி சோதனையிடுகிறார். - படம்: குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம்,

அரசாங்கத்தின் பல அமைப்புகள் ஒன்றிணைந்து தீவுமுழுவதும் உள்ள சோதனைச் சாவடிகளில் குற்றங்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டன. அந்த சோதனைகள் அக்டோபர் 15ஆம் தேதிமுதல் 19ஆம் தேதிவரை ஏறத்தாழ ஒருவாரம் நீடித்தது.

காவல்துறை, குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், சுகாதார அறிவியல் ஆணையம் ஆகிய அமைப்புகள் அளித்த கூட்டறிக்கையில் 80 நபர்களுக்கு மேல் பல்வேறு குற்றங்களுக்காகப் பிடிபட்டனர் என்று குறிப்பிட்டிருந்தன. நிலம், நீர், வான் என மூன்று வழிகளிலும் சிங்கப்பூருக்குள் நுழைந்தோர் அவற்றுக்கான சாவடிகளில் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

நடவடிக்கையில் 14,000 பயணிகள், 280 வாகனங்கள் சோதிக்கப்பட்டன. எல்லைகள் தாண்டி எடுத்துவரப்படும் ரொக்கக்தையும் இதர கடத்தல் குற்றங்களையும் கட்டுப்படுத்த 11,700 பயணப்பைகள், கைப்பைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

சிங்கப்பூருக்குள் $20,000க்கு மேல் மதிப்புள்ள உள்நாட்டு அல்லது வெளிநாட்டு ரொக்கத்தை அறிவிக்காமல் எடுத்துவருவதும் குறைபாட்டுடன் உறுதிமொழி அளிப்பதும் குற்றம்.

அந்தக் குற்றத்துக்கான சோதனைகளில் 11 பேர் பிடிபட்டனர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டவர் ஆவர். அக்டோபர் 13ஆம் தேதி மட்டும் நான்கு வெளிநாட்டினர் வெவ்வேறு நாட்டு ரொக்கத்தினை கொண்டுவர முயன்று தனித்தனியே பிடிபட்டனர். அவர்கள் கடத்த முயன்ற மொத்தத் தொகையின் மதிப்பு $1.2 மில்லியனாகும்.

பிடிபட்ட 11 பேரில் நால்வருக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டது. அறுவருக்கு மொத்தம் $24,000 அபராதம் விதிக்கப்பட்டு, கடைசி நபரின் குற்றம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

சரியான தொகைக்கான உறுதிமொழி அளிக்காமல், உள்நாட்டு அல்லது வெளிநாட்டு ரொக்கப் பணத்தை சிங்கப்பூருக்குள் எல்லை கடந்து கொண்டுவருவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு குற்றம்புரிவோருக்கு $50,000 வரை அபராதம், மூன்று ஆண்டு சிறை அல்லது இரண்டு தண்டனைகளும் ஒருசேர விதிக்கப்படலாம். ரொக்கம் பறிமுதல் செய்யப்படலாம்.

ஜிஎஸ்டி (GST) பொருள்சேவை வரி செலுத்தப்படாத சிகரெட், புகையிலை போன்ற இதர பொருள்களை கொண்டுவந்த 62 நபர்களும் சோதனைகளில் பிடிபட்டோரில் அடங்குவர்.

குறிப்புச் சொற்கள்