மத்திய சேம நிதிக் கழகம் சென்ற ஆண்டு (2023), முன்னெப்போதும் இல்லாத அளவில், $20 பில்லியனுக்கு மேற்பட்ட தொகையை வட்டியாக வழங்கியுள்ளது.
ஓய்வுகால வழங்குதொகையும் புதிய உச்சத்தைத் தொட்டதாகக் கூறப்பட்டது. சென்ற ஆண்டு $3 பில்லியனுக்கு மேற்பட்ட தொகை இவ்வாறு வழங்கப்பட்டது. இதன்கீழ், 513,000 மசே நிதி உறுப்பினர்கள் மாதாமாதம் இவ்வாறு வழங்குதொகையைப் பெற்றனர்.
கழகம், 2023ஆம் ஆண்டுக்கான அதன் அறிக்கையில் இந்தத் தகவல்களைக் கூறியது.
சென்ற ஆண்டு மசே நிதி உறுப்பினர்களுக்கு வட்டியாக $21 பில்லியன் வழங்கப்பட்டுள்ளது. ஒப்புநோக்க, 2022ல் வழங்கப்பட்ட $19.8 பில்லியனைவிட இது 6.1 விழுக்காடு அதிகம்.
உறுப்பினர்கள் மசே நிதிக் கணக்குகளில் உள்ள தொகை 4.8 விழுக்காடு அதிகரித்து $571 பில்லியனாக ஆனதால், கழகம் வழங்கிய வட்டித் தொகையும் அதிகரித்தது.
சிறப்புக் கணக்கிலும் மெடிசேவ் கணக்கிலும் உள்ள தொகை சென்ற ஆண்டு முதல்முறையாக நான்கு விழுக்காட்டுக்குமேல் அதிகரித்ததால் 2023ன் சராசரி வட்டி விகிதமும் அதிகரித்ததாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு காலாண்டிலும் மறுஆய்வு செய்யப்படும் இந்த வட்டி விகிதம், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 4.01 விழுக்காடாகவும் அதற்கடுத்த காலாண்டில் 4.04 விழுக்காடாகவும் பதிவானது.
தொடர்புடைய செய்திகள்
சென்ற ஆண்டு ஓய்வுகால வழங்குதொகையாக $3.4 பில்லியன் வழங்கப்பட்டது. 2022ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க, இது 21.4 விழுக்காடு அதிகம்.

