வரும் 2025 முதலாம் காலாண்டில் மத்திய சேம நிதியின் (CPF) சிறப்புக் கணக்கு, மெடிசேவ் மற்றும் ஓய்வுக்கால கணக்குகளுக்கான வட்டி விகிதம் 4 விழுக்காட்டுக்குக் குறையும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அக்டோபர் மாதம் தொடங்கிய தற்போதைய காலாண்டில் அந்த வட்டி விகிதம் ஆண்டுக்கு 4.14 விழுக்காடாக உள்ளது.
2025 ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதலாம் காலாண்டிற்குரிய நிர்ணயிக்கப்பட்ட நிதிச் சந்தை வட்டி விகிதம் 4 விழுக்காட்டுக்கும் குறைவாகப் பதிவானதால், மசே நிதியின் மூன்று கணக்குகளுக்கும் 4 விகித வட்டி முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவரம் மத்திய சேம நிதிக் கழகம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், சுகாதார அமைச்சு ஆகியன புதன்கிழமை (டிசம்பர் 11) வெளியிட்ட கூட்டறிக்கையில் இடம்பெற்று உள்ளது.
சிங்கப்பூர் அரசாங்கப் பத்திரங்களின் மீதான பத்தாண்டு முதலீட்டுக்குரிய 12 மாத சராசரி வட்டி விகிதத்தின் அடிப்படையில் மசேநிதியின் சிறப்பு, மெடிசேவ் மற்றும் ஓய்வுக்கால கணக்குகளுக்கான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுவதாக அறிக்கை குறிப்பிட்டது.
மசே நிதி வட்டி விகிதம் தவிர, 65 வயதுக்கு உட்பட்டோருக்கான அடிப்படை சுகாதாரப் பராமரிப்புக்கான குறைந்தபட்சத் தொகை அடுத்த ஆண்டு $71,500லிருந்து $75,000ஆக அதிகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சராசரி வட்டி விகிதத்துடன் 1 விழுக்காடு சேர்த்து இந்தக் கணக்குகளுக்கான வட்டி விகிதம் கணக்கிடப்படுகிறது.
2023 நவம்பர் முதல் 2024 அக்டோபர் வரையிலான காலகட்டத்திற்குரிய சராசரி வட்டி விகிதம் 2.99 விழுக்காடு என்று மத்திய சேம நிதி இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதிலிருந்து 1 விழுக்காடு சேர்த்த பின் 3.99 விழுக்காடு என்றானது. அதன் அடிப்படையில் 4 விழுக்காடு வட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.

