மத்திய சேம நிதியின் சிறப்புக் கணக்கு, மெடிசேவ் கணக்கு மற்றும் ஓய்வுக்காலக் கணக்குகளுக்குரிய வட்டி விகிதம் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாத காலத்திற்கு 4 விழுக்காடு என்பதே தொடரும்.
இந்த மூன்று கணக்குகளின் நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதம் அடிப்படை வட்டி விகிதத்தைக் காட்டிலும் குறைவாக இருக்கின்றபோதிலும், மூன்றாம் காலாண்டில் அடிப்படை வட்டி விகிதமான 4 விழுக்காடு வழங்கப்படும் என்று மத்திய சேம நிதிக் கழகமும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் வியாழக்கிழமை (மே 22) கூட்டாகத் தெரிவித்தன.
பத்தாண்டுக்கான சிங்கப்பூர் அரசாங்க சேமிப்புப் பத்திரங்களின் 12 மாத சராசரி வட்டி வருவாயில் 1 விழுக்காடு சேர்த்து இந்தக் கணக்குகளுக்கான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது.
மத்திய சேம நிதி சாதாரணக் கணக்குகளுக்கான வட்டி விகிதம் 2.5 விழுக்காடு என்பதிலும் வீவக வீடமைப்புக் கடனுக்கான வட்டி விகிதம் 2.6 விழுக்காடு என்பதிலும் மாற்றமில்லை.
55 வயதுக்குக் கீழ் உள்ள மத்திய சேம நிதி உறுப்பினர்கள் தங்களது சாதாரணக் கணக்கில் உள்ள முதல் $60,000க்கு 1 விழுக்காடு கூடுதல் வட்டியை தொடர்ந்து பெறுவார்கள்.
அதேபோல, 55 வயதைக் கடந்தவர்களின் சாதாரணக் கணக்கில் உள்ள முதல் $30,000க்கு கூடுதலாக 2 விழுக்காடு வட்டி பெறுவதும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.