வீடுகளுக்கான இணையத் திசைவிகள் மேம்பட்ட தரநிலையுடன் இருக்க வேண்டும்

இணையப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் புதிய அறிவிப்பு

வீடுகளுக்கான இணையத் திசைவிகள் மேம்பட்ட தரநிலையுடன் இருக்க வேண்டும்

2 mins read
7c4d5b86-9c5e-4718-97ff-97de680e9a2e
இணையப் பாதுகாப்புத் தரநிலைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் ‘யூடியூப்’ பக்கம்.

வரும் 2027ஆம் ஆண்டுமுதல் வீடுகளில் பயன்படுத்தப்படும் இணையத் திசைவிகள் (residential routers) மேம்பட்ட பாதுகாப்புத் தரநிலைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

இணையப் பாதுகாப்பு முத்திரைத் திட்டத்தின்கீழ் தற்போது அடிப்படைத் தரநிலையை எட்டும் அவை, இனி இரண்டாவது நிலையை எட்ட வேண்டியிருக்கும்.

இதனையொட்டி, சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு, தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து பணியாற்றுகிறது என்றும் இது 2027ஆம் ஆண்டு நடப்புக்கு வரும் என்றும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (மார்ச் 2) அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது பேசிய தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ், “பொதுமக்களை இணையத் தீங்கிலிருந்து பாதுகாக்க அரசாங்கம் மேலும் பல முன்னெடுப்புகளை மேற்கொள்ளும்,” என்றார்.

திசைவிகளுக்கு அடுத்ததாக அதிகம் பாதிக்கப்படுபவை இணைய நெறிமுறை (internet Protocol) கண்காணிப்புக் படக்கருவிகள் என்ற அவர், அக்கருவிகளும் இணையப் பாதுகாப்பு முத்திரை இரண்டாம் நிலையை எட்டுவது குறித்தும் ஆராயப்படும் என்றார்.

இணையப் பாதுகாப்பு நன்னெறி முத்திரை

அடுத்ததாக, தனிப்பட்ட, முக்கியமான தகவல்கள் அடங்கிய தரவுகளைக் கையாளும் நிறுவனங்களுக்கு கூடுதல் தரவுப் பாதுகாப்புத் தேவைகளையும் கடுமையான இணையப் பாதுகாப்புக் கட்டமைப்புகளையும் அறிமுகம் செய்வது குறித்து ஆராயப்படுவதாகவும் திரு டான் விளக்கினார்.

இவ்வகை தரவுகளைக் கையாளும் நிறுவனங்கள் இணையப் பாதுகாப்பு நன்னெறி முத்திரையை (Cyber Trust Mark) எட்டுவதை அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு (GovTech) உறுதிசெய்யும்.

அதிமுக்கியத் தகவல் உள்கட்டமைப்பு உரிமையாளர்கள், அக்கட்டமைப்பிற்கான பாதுகாப்புத் தணிக்கையாளர்கள், உரிமம் பெற்ற இணையப் பாதுகாப்புச் சேவை வழங்குநர்கள் ஆகியோரும் அம்முத்திரையை எட்ட வேண்டியிருக்கும்.

அதிமுக்கியத் தகவல் உள்கட்டமைப்பு உரிமையாளர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அதிமுக்கியத் தகவல் உள்கட்டமைப்பு அல்லாத அமைப்புகளுக்கு (non-CII systems), இணையப் பாதுகாப்பு நன்னெறி முத்திரை நிலை 5ஐப் பெற 2027 இறுதிவரை இரண்டு ஆண்டுகள் காலக்கெடு வழங்கப்படும்.

அதேபோல், சிஐஐ தணிக்கையாளர்கள், தங்களது வணிகச் செயல்பாடுகளுக்கும் சேவைகளுக்கும் ஆதரவளிக்கும் அமைப்புகளுக்கு 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் அம்முத்திரையைப் பெற வேண்டும்.

குறிப்புச் சொற்கள்