பீஷான், தாம்சன் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) துண்டிக்கப்பட்ட கண்ணாடியிழை இணையச் சேவை புதன்கிழமை காலை வழக்கநிலைக்குத் திரும்பியதாக நெட்லிங்க் டிரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்றாம் தரப்பு ஒப்பந்த நிறுவனம் ஒன்று மேற்கொண்ட கட்டுமானப் பணிகளின்போது நெட்லிங்க் நிறுவனத்தின் கண்ணாடியிழை உள்கட்டமைப்பு சேதமடைந்தது. இதனால் பீஷான், தாம்சன் பகுதிகளில் ஏறக்குறைய 2,000 இணைய இணைப்புகள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தனது ஊழியர்கள் இரவு முழுவதும் சீரமைப்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு, புதன்கிழமை காலை மணி 5.40க்கு வேலைகளை முழுமையாய் நிறைவு செய்ததாக நெட்லிங்க் டிரஸ்ட் குறிப்பிட்டது.
இணையச் சேவைத் தடையால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நெட்லிங்க் டிரஸ்ட் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. சேவைத் தடங்கல் தொடர்ந்து நீடித்தால், வாடிக்கையாளர்கள் அவரவர் இணையச் சேவை நிறுவனங்களைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் இணையச் சேவைத் தடை பற்றிய தகவல்கள் வெளியாகத் தொடங்கின. நீர்க்கசிவு, நிலத்தடித் தடங்கல்கள் காரணமாகச் சீரமைப்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்டெல், ஸ்டார்ஹப், எம்1 ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சந்தாதாரர்களும் இதனால் பாதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நெட்லிங்க் டிரஸ்ட் உறுதியளித்துள்ளது.
