இணைய அச்சுறுத்தல்களைச் செயற்கை நுண்ணறிவைக் கொண்டே முறியடிக்கலாம்: டான் கியெட் ஹாவ்

இணைய அச்சுறுத்தல்களைச் செயற்கை நுண்ணறிவைக் கொண்டே முறியடிக்கலாம்: டான் கியெட் ஹாவ்

2 mins read
bf06fcb8-f4ad-4eb4-aa06-816dd2f25c26
கவ்டெக் சிங்கப்பூரின் ஸ்டேக்எக்ஸ் (STACKx) இணையப் பாதுகாப்பு நிகழ்ச்சியில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணையமைச்சர் டான் கியெட் ஹாவ் பேசினார். - படம்: சாவ்பாவ்

செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் அச்சுறுத்தல்களைச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டே கையாள முடியும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணையமைச்சர் டான் கியெட் ஹாவ் கூறியுள்ளார்.

முக்கியச் சேவைகளை வழங்கும் இணையக் கட்டமைப்புகளை ஊடுருவ இனி மேம்பட்ட திறன்கள் தேவையில்லை என்ற அவர், கட்டமைப்புகளில் உள்ள குறைபாடுகளைச் சாதகமாகப் பயன்படுத்தக்கூடிய புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் அதிகரித்துள்ளன என்றார்.

கவ்டெக் சிங்கப்பூரின் ஸ்டேக்எக்ஸ் (STACKx) இணையப் பாதுகாப்பு நிகழ்ச்சியில் பேசிய திரு டான், இணைய அச்சுறுத்தல்களை மெத்தனமாக எண்ணிவிடவேண்டாம் என்று வலியுறுத்தினார்.

மரினா பே சேன்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

அந்த்ரோபிக் நிறுவனத்தின் கிளவுட் மைதோஸ் பிரிவியூ (Claude Mythos Preview) என்ற செயற்கை நுண்ணறிவுக் கருவியால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் குறித்து திரு டான் பேசினார்.

அந்தச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், மென்பொருள் கட்டமைப்புகளில் உள்ள குறைபாடுகளைத் தானாகவே கண்டறிந்து, அவற்றைச் சாதகமாகப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்துவதற்கான குறியீடுகளை (code) உருவாக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது என்று திரு டான் விளக்கம் அளித்தார்.

அந்த்ரோபிக் நிறுவனம் மிகப்பெரிய இணையத் தேடல் தளங்களிலும் செயல்பாட்டுக் கட்டமைப்புகளிலும் எளிதில் ஊடுருவக்கூடிய அம்சங்களைக் கண்டறிந்துள்ளது.

அத்தகைய தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய அபாயங்களைச் சுட்டிய திரு டான், அந்த்ரோபிக் நிறுவனம் பொது வெளியில் அதன் புதிய செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பை அறிமுகம் செய்வதற்குப் பதிலாக குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் அதைச் சோதித்துப் பார்க்கும்படியான அனுமதியை வழங்கியுள்ளது என்றார்.

“அத்தகைய நடவடிக்கை அச்சுறுத்தலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதாக நிபுணர்கள் கருதுகின்றனர். தவறான கைகளில் அந்தச் செயற்கை நுண்ணறிவுக் கருவி சென்றுவிட்டால் திறன் இல்லாத மோசடிக்காரர்கள்கூட அதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்,” என்றார் திரு டான்.

அவ்வாறு நடந்தால் உலக அளவில் ஏற்படக்கூடிய மிகப்பெரும் பாதிப்புகள் குறித்து யோசித்துப் பார்க்கும்படி திரு டான் நிகழ்ச்சியில் கூடியிருந்தோரிடம் கேள்வி எழுப்பினார்.

எனவே, நிறுவனங்கள் அவற்றின் மின்னிலக்கக் கட்டமைப்புகளின் பாதுகாப்பை இன்னும் எவ்வாறு வலுப்படுத்துவது என்பதை மறுஆய்வு செய்யவேண்டும் என்று திரு டான் அறிவுறுத்தினார்.

முக்கிய தகவல் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பிரிவுகள் அவற்றின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தும்படி அரசாங்கம் வலியுறுத்தியிருப்பதையும் திரு டான் பகிர்ந்துகொண்டார்.

குறிப்புச் சொற்கள்