அனைத்துலக காவல்துறை அமைப்பான ‘இன்டர்போல்’ புதிய எச்சரிக்கை அறிக்கையை (alert notice) வெளியிட்டுள்ளது.
குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டுள்ள தனிநபர்களும் குழுக்களும் வெளிநாடுகளில் மறைத்துவைத்திருக்கும் சொத்துகளைக் கண்டுபிடிப்பதற்கு சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு உதவ அந்தப் புதிய எச்சரிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
52 நாடுகளும் பிரதேசங்களும் சம்பந்தப்பட்ட முன்னோடித் திட்டத்தில் அந்த வெள்ளி அறிக்கை (Silver Notice) என்று அழைக்கப்படும் அது, கட்டங்கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் என்று இன்டர்போல் வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அது நவம்பர் 2025 வரை நீடிக்கும் என்றும் அது கூறியது.
இத்தாலிய அதிகாரிகள் முதல் வெள்ளி அறிக்கைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். குண்டர் கும்பல் ஒன்றின் மூத்த உறுப்பினருக்குச் சொந்தமான ஏறக்குறைய அரை பில்லியன் யூரோ பெறுமானமுள்ள சொத்துகள் குறித்து அவர்கள் தகவல் திரட்ட முயற்சி செய்கின்றனர்.
‘பாலெர்மோ’ எனும் இத்தாலிய நகரின் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அதற்குக் கோரிக்கை விடுத்தனர். உலகம் முழுவதும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சொத்துகள் குறித்து தகவல் திரட்டுவதற்கு அவர்கள் அந்தக் கோரிக்கையை முன்வைத்தனர். அந்தச் சொத்துகள் பெரும்பாலும் ஆசியாவிலும் தென் அமெரிக்காவிலும் மறைத்துவைக்கப்பட்டுள்ளன.
ஒத்துழைப்புக்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுக்கு நேரடியாக அனுப்பப்படும் அதிகாரபூர்வமற்ற கோரிக்கையான ‘சில்வர் டிஃபியூஷன்ஸ்’ (Silver Diffusions) மூலமும் சட்ட அமலாக்க அமைப்புகள் உதவி கோரலாம்.
வெள்ளி அறிக்கை, ‘சில்வர் டிஃபியூஷன்ஸ்’ ஆகியவற்றின் மூலம், மோசடி, ஊழல், போதைப்பொருள் கடத்தல், சுற்றுப்புறக் குற்றங்கள், மற்ற கடுமையான குற்றங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய சொத்துகள் குறித்து சட்ட அமலாக்க அமைப்புகள் தகவல் கோரலாம் என்று இன்டர்போல் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
“மோசடியில் சம்பந்தப்பட்ட சொத்துகள், வாகனங்கள், நிதிக் கணக்குகள், வர்த்தகங்கள் உள்ளிட்டவை பற்றி தகவல் பெறுவதற்கும் அவற்றை அடையாளம் காண்பதற்கும் அவற்றின் இடங்களைக் கண்டுபிடிக்கவும் உதவி வழங்கப்படும்,” என்று இன்டர்போல் தெரிவித்தது.
கிடைத்த தகவல்களை சட்ட அமலாக்க அமைப்புகள் பின்னர் தேசிய சட்டங்களுக்கு உட்பட்ட இருதரப்புக் கலந்துரையாடல்களுக்குப் பயன்படுத்தலாம் என்றும் அது கூறியது.