கேமரா உபகரணங்களை வாடகைக்கு எடுத்துவிட்டு பின்னர் பயன்படுத்தப்பட்ட பொருள்களை விற்கும் கடைகளில் விற்றுவிடும் மோசடிக்காரர்களைப் பிடிக்க இரு உள்ளூர் புகைப்படக்காரர்கள் வைத்த பொறியில் இளையர் ஒருவர் சிக்கியிருக்கிறார்.
அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த மோசடியின் பின்னணியில் மற்றவர்களும் தலைமறைவாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இதில் பாதிக்கப்பட்ட புகைப்படக்காரர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசியபோது மோசடி சம்பவம் குறித்து செப்டம்பரில் தெரிய வந்ததாகக் கூறினர்.
மோசடிக்காரர்கள் பல ஆயிரம் மதிப்புள்ள கேமரா உபகரணங்களை வாடகைக்கு எடுத்த பிறகு அவற்றைத் திரும்ப ஒப்படைப்பதற்குப் பதிலாக பயன்டுத்தப்பட்ட கடைகளில் விற்றுவிடுகின்றனர் என்று அவர்கள் கூறினர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாதிக்கப்பட்டவர்களில் இருவர், மோசடி செய்யும் ஒருவரை ஒரு இடத்திற்கு வரவழைத்து பிடிக்கத் திட்டமிட்டனர்.
இருவரில் ஒருவர், திரு மார்கஸ் சோங், 31, புகைப்படக் கலைஞரும் கேமரா உபகரணங்களை வாடகைக்கு விடும் ‘ஜஸ்ட்ரென்ட்லா’ நிறுவனத்தின் உரிமையாளரும் ஆவார்.
விரைவாகச் செயல்பட்டிருக்காவிட்டால் சுமார் 16,000 வெள்ளி இழப்பு ஏற்பட்டிருக்கும் என்றார் திரு சோங்.
தொடர்புடைய செய்திகள்
பயன்படுத்தப்பட்ட கடைக்கு $1,650 கொடுத்து விற்கப்பட்ட தமது உபகரணங்களை அவர் திரும்பப் பெற்றுள்ளார்.
ஓர் இன்ஸ்டகிராம் பதிவில் ஒரு வாடிக்கையாளருடன் பகிர்ந்துகொண்ட புகைப்படங்கள் இடம்பெற்று இருந்ததைக் கண்டு சோங்குக்கு சந்தேகம் ஏற்பட்டது.
செம்பம்பர் 17ஆம் தேதி தமது கடைக்கு வந்த அதே வாடிக்கையாளர்தான் தாம் பகிர்ந்துகொண்ட புகைப்படங்களை வெளியிட்டு கேமரா உபகரணங்களை விற்க முயற்சி செய்வதாக சோங்குக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அந்த வாடிக்கையாளரை அழைத்துப்பேசிய சோங், சில உபகரணங்களை சேர்த்துக் கொடுக்க மறந்துவிட்டதாகக் கூறி ‘சுவிஸ்ஹோட்டல் த ஸ்டாம்ஃபோர்ட்டுக்கு’ வரவழைத்தார்.
இதற்கிடையே, அவரைப்போல ஏமாற்றப்பட்ட மற்றொருவர், இந்தச் சந்திப்பு குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்திருந்தார்.
அங்கு வந்த மோசடிக்காரரை எதிர்கொண்ட சோங், காவல்துறையினர் வரும் வரை காத்திருந்தார்.
திரு சோங்கின் சில உபகரணங்களை ஏற்கெனவே விற்றுவிட்டதாகவும் அந்த இளையர் கூறினார்.
இந்த மோசடி சம்பவம் தொடர்பில் 21 வயது இளையர் கைது செய்யப்பட்டதை காவல்துறை உறுதி செய்துள்ளது. விசாரணை தொடர்கிறது.

