மாதின் வீட்டுக் கதவைச் சுத்தியலால் தாக்கியதாக ஆடவர் மீது அச்சுறுத்தல் குற்றச்சாட்டு

1 mins read
8f224e3d-1271-4c32-a65c-4918cdeff369
செயிண்ட் ஜார்ஜஸ் லேனில் உள்ள மாது ஒருவரின் வீட்டிற்குச் சென்று அவரை அச்சுறுத்த ஹோ சீ கம், 70, பயன்படுத்தியதாகக் கூறப்படும் சுத்தியலைக் காவல்துறை கைப்பற்றியது. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

சுத்தியலை ஏந்திய 70 வயது ஆடவர் ஒருவர், வாம்போ அருகே செயிண்ட் ஜார்ஜஸ் லேனில் உள்ள மாது ஒருவரின் வீட்டிற்குச் சென்று அவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

அந்த மாதிடமிருந்து தமக்கு கிடைக்க வேண்டிய பணம் வந்துசேராததும் தொலைபேசி அழைப்புகளை ஏற்க அவர் மறுத்ததாகவும் கூறிய அந்த ஆடவர், அந்த மாதின் வீட்டு வாசல் கதவை சுத்தியலால் அடித்து அதைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஹோ சீ கம் மீது ஓர் அச்சுறுத்தல் குற்றச்சாட்டும் போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டும் திங்கட்கிழமை (ஜனவரி 27) சுமத்தப்பட்டது. அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் விசாரணையை நிறைவுசெய்ய கூடுதல் அவகாசம் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, பிப்ரவரி 24ஆம் தேதி ஹோ நீதிமன்றத்துக்குத் திரும்புவார்.

அந்த மாதுக்குப் பீதியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) மாலை 4 மணியளவில் அவரது வீட்டிற்கு ஹோ சென்றதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டது. இருவருக்கும் இடையேயான உறவு குறித்து தெரிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே, 2024 அக்டோபர் 12ஆம் தேதி நியூ கேத்தே ஹோட்டலில் உள்ள அறையில் ஹோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்தது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து, அவர் வேறொரு குற்றச்சாட்டையும் எதிர்நோக்குகிறார்.

குறிப்புச் சொற்கள்