இந்தியாவின் விமானத் துறை பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்பு தணிக்கை செய்த விமானங்களிலும் விமான நிலையங்களிலும் பல்வேறு கோளாறுகள் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளது.
இம்மாதத் தொடக்கத்தில் ஏர் இந்தியாவின் AI171 விமானம் விழுந்து நொருங்கியதை அடுத்து அந்தத் தணிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சரியான கண்காணிப்பும் பழுதுபார்க்கும் நடவடிக்கைகளும் இல்லை என்பதைக் காட்டும் வகையில் சில பழுதுகள் மீண்டும் மீண்டும் ஏற்படுவதை அமைப்பு கண்டறிந்தது.
புதுடெல்லி, மும்பை விமான நிலையங்களில் பழுதடைந்த தள்ளுவண்டிகள் போன்ற பயன்படுத்த முடியாத கருவிகளும் சிவில் விமானத் துறை தலைமை இயக்குநர் குழுமம் நடத்திய சோதனையில் தெரியவந்தது.
கருவிகளின் கட்டுப்பாடு, வேலை தொடர்பான உத்தரவுகள் ஆகியவையும் பின்பற்றப்படவில்லை.
“சோதனையின்போது கண்டறியப்பட்ட அனைத்து குறைபாடுகளும் சம்பந்தப்பட்ட நடத்துநர்களிடம் தெரிவிக்கப்பட்டன. அடுத்த ஏழு நாள்களுக்குள் அவர்கள் உரிய திருத்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்,” என்று கட்டுப்பாட்டு அமைப்பு அறிக்கை வெளியிட்டது.
இந்திய விமானத் துறையின் துரிதமான வளர்ச்சிக்கு ஏற்ப விமான நிலையங்களும் விமானங்களும் செயல்படவில்லை என்று அறிக்கை சுட்டியது.
விமானத்தின் பொறியாளர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை அலட்சியமாக விட்டுவிட்டது, விமானத் துறையால் உருவாக்கப்பட்ட பழுதுகள் அடங்கிய அறிக்கைகள் தொழில்நுட்பப் பதிவேடுகளில் பதிவு செய்யப்படாமல் இருந்தது ஆகியவை அதிகாரிகள் கண்டுபிடித்த சில குறைபாடுகள்.
தொடர்புடைய செய்திகள்
தேய்ந்துபோன சக்கரங்களைக் கொண்டிருந்த உள்நாட்டு விமானம் ஒன்று புறப்பாட்டிலிருந்து நிறுத்தப்பட்டது.
குறிப்பிட்ட ஓர் இடத்தில் உள்ள விமானப் பயிற்சித் தளம் விமானத்தின் வடிவமைப்புக்குப் பொருத்தமற்று இருந்தது. அதன் மென்பொருளும் மேம்படுத்தப்படவில்லை.
அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தை அடுத்து விமான நிலையங்களுக்கு அருகே அனுமதிக்கப்பட்டதைவிட அதிக உயரத்தில் கட்டப்பட்ட கட்டடங்களை இடிப்பதற்கான சட்டத்தை அதிகாரிகள் முன்வைத்துள்ளனர்.