செயற்கை நுண்ணறிவுடன் மலிவுவிலைக் கைப்பேசித் திட்டங்கள் அறிமுகம்

செயற்கை நுண்ணறிவுடன் மலிவுவிலைக் கைப்பேசித் திட்டங்கள் அறிமுகம்

1 mins read
fc7283eb-f4d5-4a81-8538-25a49a0f1699
ஒவ்வொரு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கும் தனித்தனியாகச் சந்தா செலுத்த வேண்டிய அவசியமில்லாமல், பல்வேறு மாதிரிகளை ஒரே கைப்பேசிச் செயலி வழியாக வாடிக்கையாளர்கள் பயன்படுத்த திட்டங்கள் வழிவகுக்கின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உள்ள ‘சர்க்கிள்ஸ்.லைஃப்’, ‘கிகா!’ ஆகிய மெய்நிகர்த் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தங்களது கைப்பேசித் திட்டங்களுடன் கட்டண அடிப்படையிலான அதிநவீன செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை இணைத்து மலிவுவிலையில் வழங்கத் தொடங்கியுள்ளன.

இதன்மூலம் அத்துறையில் ஒரு புதிய விலைப்போர் உருவெடுத்துள்ளது. முதலில் சர்க்கிள்ஸ்.லைஃப் நிறுவனம் மாதத்துக்கு $8 என்ற மிகக் குறைந்த விலையில் 500ஜிபி உள்ளூர் தரவு, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் சாட்ஜிபிடி, கூகல் ஜெமினை உள்ளிட்ட ஆறு முக்கியச் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பயன்படுத்தும் வசதியையும் வழங்கத் தொடங்கியது.

அதற்குப் போட்டியாக, கிகா! நிறுவனம் மாதத்துக்கு $13.90 கட்டணத்தில் 23 செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பயன்படுத்தும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அத்திட்டம் முக்கியமாக 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளையர்களைக் குறிவைத்துத் தொடங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கும் தனித்தனியாகச் சந்தா செலுத்த வேண்டிய அவசியமில்லாமல் பல்வேறு மாதிரிகளை ஒரே கைப்பேசிச் செயலி வழியாக வாடிக்கையாளர்கள் பயன்படுத்த இந்தத் திட்டங்கள் வழிவகுக்கின்றன.

சிங்கப்பூரின் போட்டித்தன்மைமிக்க கைப்பேசித் திட்டச் சந்தையில் தங்களின் சேவைகளைத் தனித்துவப்படுத்திக் காட்டவும் வாடிக்கையாளர்களுக்கு விலைக்குத் தகுந்த பயனை அளிக்கவும் இந்த உத்தி பெரிதும் உதவுவதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் அன்றாட வேலைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துவரும் வேளையில், இத்தகைய மலிவுவிலைக் கூட்டுத் திட்டங்கள் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுதொலைத்தொடர்புகைப்பேசி

தொடர்புடைய செய்திகள்