பல்லவ மன்னன் இராஜசிம்மன் எழுப்பிய காஞ்சிக் கைலாயநாதர் கோயிலில் உள்ள ஒரு சிலையைப் பற்றி இந்தியக் கட்டடக்கலை வல்லுநரும் தலைமைச் சிற்பியுமான முனைவர் க. தக்ஷிணாமூர்த்தி ஸ்தபதி எழுதிய நூல் சில மாதங்களுக்குமுன் வெளியீடு கண்டுள்ளது.
‘சிற்பம் ஒன்று வடிவம் இரண்டு - கண்டேன் இராஜசிம்ம பல்லவனை’ என்பது நூலின் பெயர்.
சிற்பக்கலையின் உன்னதத்தை உலகிற்கு உரக்கக் கூறும் மாமல்லபுரக் கற்றளிகளை அமைத்தவர் முதலாம் நரசிம்ம பல்லவன். அவரது பேரனான இரண்டாம் நரசிம்மன், இராஜசிம்ம பல்லவன் என்றும் அறியப்பட்டார்.
மாமல்லபுரக் கடற்கரைக் கோயில், பனைமலை தாளகிரீசுவரர் கோயில் போன்றவற்றைக் கட்டிய இராஜசிம்மன் படைத்த கலைக் காவியம் காஞ்சிக் கைலாயநாதர் கோயில் என்கிறார் நூலாசிரியர்.
அந்தக் கோயிலின் தெற்கு வாசலில் ஒரு சிலை இருவேறு வடிவங்களைப் புலப்படுத்துவதை, சிற்பம் செதுக்கப்பட்டு ஏறத்தாழ 1,300 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுணர்ந்ததால் ஏற்பட்ட பெருவியப்பை இந்நூலில் பதிவுசெய்துள்ளார்.
வேறெங்கும் இந்தச் சிலை பற்றி இந்தக் கோணத்தில் பதிவு செய்யப்படவில்லை என்கிறார் இவர்.
நூலாசிரியரே தேர்ந்த சிற்பி என்பதால் அவரது கண்ணோட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
இவரது தந்தையும் (ஸ்தபதி எஸ்.கே. ஆச்சாரி), தாய்மாமனும் (வை. கணபதி ஸ்தபதி) புகழ்பெற்ற கட்டடக்கலை வல்லுநர்கள் என்ற நிலையில், சிற்ப அறிவுமிக்க சூழலில் வளர்ந்து, தன்னளவிலும் பாரம்பரிய இந்துக் கோயில் கட்டுமானம், சிற்பம் வடித்தல் என உலகெங்கும் நற்பெயர் ஈட்டியவர் தக்ஷிணாமூர்த்தி ஸ்தபதி.
தொடர்புடைய செய்திகள்
வானில் மேகங்களைப் பார்க்கையில் அவரவர் ரசனை, கற்பனைக்கேற்ப அவை வெவ்வேறு வடிவங்களில் தோற்றமளிப்பதாகப் பலரும் கருதுவதுண்டு.
நூலாசிரியர் காஞ்சிக் கோயிலில் கண்டுணர்ந்தது அந்த வகையானதன்று.
இந்தச் சிலை இன்னொரு வடிவத்தையும் காட்டுகிறது என்று தனிப்பட்ட கருத்தாக மட்டும் சொல்லாமல், அதைக் கண்டுகொண்ட நாள் முதல், நூலாக வடிக்கும்வரை, பல மாதங்கள், தான் கருதுவது சரியா என்பதை ஐயந்திரிபற அறிந்துகொள்ளப் பல்வேறு ஆதாரங்களைத் திரட்டியுள்ளார். எண்ணற்ற நூல்களைப் படித்துத் தெளிந்த பிறகே இது இரட்டைச் சிற்பம் என்று உறுதியாகச் சொல்கிறார்.
பதினாறு கரங்களுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் கோலத்தில் செதுக்கப்பட்டுள்ள சிலை மேலோட்டமான பார்வைக்கு இந்துத் தெய்வமான அன்னை லலிதா பரமேஸ்வரியாகக் காட்சியளிக்கிறது. அதை உற்றுநோக்கினால், மன்னர் இராஜசிம்ம பல்லவன் தன் உருவத்தை அதில் ஒளித்துச் செதுக்க வைத்திருக்கிறார் என்பதை விளக்குகிறார் நூலாசிரியர்.
இராஜசிம்ம பல்லவனே ‘லலிதவிலாசன்’ (அன்னை லலிதாவிடம் வசிப்பவன்) என்ற தமது விருதுப்பெயரைக் கல்வெட்டில் பொறிக்கச் சொன்னதைச் சுட்டி, அவர் அந்தச் சிலையில் தம் உருவை ஒளித்துவைத்ததன் பொருத்தத்தை விளக்குகிறார்.
ஏன் ஒளித்துவைத்துள்ளதாகக் கூறுகிறார் என்றால் சட்டெனக் கண்களுக்குப் புலப்படும் விதமாக மன்னரின் உருவம் அச்சிலையில் இல்லை.
எடுத்துக்காட்டாக, தாராசுரத்து ‘ரிஷபகுஞ்சரம்’ சிற்பத்தின் படத்தையும் இதே காஞ்சிக் கைலாயநாதர் கோயிலின் சங்கரநாராயணன் சிற்பத்தின் படத்தையும் நூலில் இணைத்துள்ளார் ஆசிரியர். அவை ஒரு கோணத்தில் ரிஷபமாகவும் (காளை) மறுகோணத்தில் குஞ்சரமாகவும் (யானை), அதேபோல் ஒருபுறம் சங்கரனாகவும் மறுபுறம் நாராயணனாகவும் காட்சியளிக்கின்றன. ஆனால், அன்னை லலிதா, மன்னர் இராஜசிம்மன் உருவங்களைக் காட்டும் சிற்பத்தைப் பல்வேறு வரைபடங்கள் மூலம் நூலாசிரியர் விளக்கும்போதுதான் புரிந்துகொள்ள முடிகிறது.
இரட்டைச் சிற்பத்தில் மன்னரை 12 விதமாகப் பார்க்க முடியும் என்பதை 12 வரைபடங்களில் காட்டியுள்ளார்.
சிற்பத்தில் இரண்டு குடைகள் செதுக்கப்பட்டுள்ளன. ஒன்று அந்தரத்தில் செதுக்கப்பட்டுள்ளது. அது அருள்தரும் தெய்வத்தின் குடை. மற்றொரு குடை கைப்பிடித் தண்டுடன் இடப்புறம் செதுக்கப்பட்டுள்ளது. இது மன்னரின் வெண்கொற்றக் குடை என்கிறார்.
இந்தப் புரிதல்தான் மன்னர் தம்மை இந்தச் சிலையில் சிற்பத்துள் நுட்பமாயும் நுட்பத்துள் சிற்பமாயும் செதுக்கச் சொல்லியிருக்கிறார் என்ற எண்ணத்தை மனத்தில் அழுந்தப் பதித்தது என்கிறார் சிற்பி தக்ஷிணாமூர்த்தி.
நூல் முழுக்க இவர் இராஜசிம்மன்மேல் கொண்டுள்ள பெருவியப்பும் மரியாதையும் போற்றுதல் சொற்களாக விரவிக்கிடக்கின்றன.
இதுவரை யார் கருத்துக்கும் புலப்படாத இந்தக் கண்ணோட்டம் தனக்கு வாய்த்ததே, இராஜசிம்மனே தன்னைத் தேர்ந்தெடுத்ததாலோ என்று உருகுகிறார் நூலாசிரியர்.
இந்தச் சிலை மட்டுமன்றி, வேறுபட்ட வடிவிலான குரு தட்சிணாமூர்த்தி சிலையை இவர் வியந்து விவரிக்கும் விதமும் படிப்போரின் உள்ளம் கவரும் என்பதில் ஐயமில்லை.
இந்தக் கோயிலில் சிவலிங்கத்தைத் தவழ்ந்து சென்று வணங்கும் முறையில் (பரப்பிரம்மப் பிரதட்சணம்) கட்டட அமைப்பு அமைத்ததையும் விவரித்துள்ளார்.
குறிப்பிட்டு இந்தச் சிலைகள் பற்றிப் பேசினாலும் மொத்தக் கோயிலுமே மன்னர் இராஜசிம்மனின் கலைவேட்கையை, இறைத்தத்துவ நிலைப்பாட்டை உணர்த்துவதாகக் குறிப்பிடுகிறார்.
சிற்பக் கலையில் அளவுமுறை உள்ளது என்பதைக் கூறும் இவர், பல்லவ மன்னனின் கோயில் அமைப்பையும் மாயன் பிரமிடுகளையும் ஒப்பிட்டு விளக்குகிறார்.
சிற்பத்துறை சார்ந்தோருக்குப் பல அரிய தகவல்கள் இடம்பெற்றுள்ள இந்நூலில் இராஜசிம்மனின் 254 விருதுப்பெயர்களுக்கும் தமிழில் பொருள் விளக்கத்தை இணைத்துள்ளார் ஆசிரியர்.
நூலைப் படிப்போருக்கு இந்தச் சிலையை நேரில் சென்று காணவேண்டும் என்ற எண்ணம் பிறக்கக்கூடும். சிற்ப, கட்டடக் கலை நுட்பங்களோடு சேர்த்து நூலாசிரியர் விளக்கும் விதம் அதற்கான உந்துதலைத் தோற்றுவிக்கும் என்பது திண்ணம்.
நூலாசிரியர் இதன் ஆங்கில வடிவத்தை (The DUAL PORTRAIT Featuring Rajasimha Pallava) அண்மையில் வெளியிட்டுள்ளார்.
இரு நூல்களையுமே அமேசான், ஃபிளிப்கார்ட் ஆகிய தளங்களில் வாங்க இயலும் என்றார் அவர்.