மத்திய சேம நிதி உறுப்பினர்கள் அவர்களின் சேமிப்புகளைச் சிறப்பான முறையில் பயன்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் மத்திய சேம நிதி புதிய மின்னிலக்கத் தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
‘மத்திய சேம நிதியோடு திட்டமிடுங்கள்’ என்றழைக்கப்படும் இப்புதிய தளம் மத்திய சேமநிதி இணையத்தளத்தில் இருக்கும்.
அதன் மூலம் உறுப்பினர்கள் ஒரே தளத்தில் ஓய்வுக்கால சேமிப்புகள், வீடு வாங்குவதற்கான செலவைக் கணக்கிடுவது, சுகாதார காப்புறுதிச் சந்தாக்கள் சார்ந்தவற்றைச் செலுத்தலாம்.
அதைப் பயன்படுத்தும் உறுப்பினர்கள் அவர்களுக்கென தனிப்பயன்பாட்டுக்கான தளத்தில் அவர்களின் தற்போதைய வாழ்க்கை நிலைக்கு ஏற்ற உள்ளடக்க வளங்களையும் பயன்படுத்தலாம்.
இது மூத்தோருக்கு மட்டுமின்றி அனைத்து வயதினரும் பயன்படுத்தி நன்மை காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை (ஜூலை 5) மத்திய சேம நிதியின் 70வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் இத்தளம் செயல்பாட்டுக்கு வர தொடங்கியது.
புதிதாக திருமணமான தம்பதியினர் வீடு வாங்குவதிலிருந்து, ஓய்வுபெற்றவர்கள் அவர்களின் ஓய்வுக்கால சேமிப்புகளைத் திட்டமிடுவது வரை அனைத்து வகையிலான உதவிக் கருவிகள் தளத்தில் உள்ளடங்கியுள்ளன.
ஓய்வுக்கால வழங்குதொகைக்கான திட்டமிடல் தளம், வீடு வாங்குவதற்கான திட்டமிடல் தளம், சுகாதாரக் காப்புறுதிக்கான திட்டமிடல் தளம் ஆகியவை அவற்றில் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
வெவ்வேறு நிதி திட்டமிடல் கருவிகள், அவர்களின் நிதி ஆரோக்கியத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்காகக் கேள்வி பதில் அங்கங்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன.
“அனைவரும் அவர்களின் நிதி சார்ந்த தகவல்களை எளிதில் தெரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு இப்புதிய தளம் கைகொடுக்கும். மத்திய சேம நிதி ஏற்கெனவே வழங்கிவரும் வளங்கள் பயனுள்ளதாக இருந்தாலும் இந்தத் தளம் உறுப்பினர்களுக்குக் கூடுதல் புரிதலை அளிக்கும்,” என்றார் மத்திய சேம நிதிக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மெலிசா கூ.
70வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தின் மற்றொரு முக்கிய அங்கமாக மத்திய சேம நிதியின் வரலாற்றை ஆவணப்படுத்தும் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது.
அந்தப் புத்தகம் விற்பனைக்கு இல்லை. https://cpf.gov.sg/member/infohub/cpf70/?ref=inline-article இணையத்தளத்தில் புத்தகத்தின் மின்னிலக்கப் பதிப்பைக் காணலாம்.
ஜூலை 10ஆம் தேதி வரை நமது தெம்பனிஸ் நடுவத்தில் மத்திய சேம நிதிக் கண்காட்சி இடம்பெறுகிறது. அதில் மக்கள் கலந்துகொண்டு புதிய தளத்தைப் பயன்படுத்தியும் பார்க்கலாம். cpf.gov.sg/planwithcpf இணையத்தளத்தில் புதிய தளத்தின் மேல் விவரங்கள் உள்ளன.