சிங்கப்பூரில் உள்ள விலங்குநல அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு அதிகாரபூர்வ வழிகாட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
விலங்குகளின் ஆரோக்கியத்தையும் நலனையும் மேம்படுத்த சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு கிட்டத்தட்ட ஈராண்டுகள் ஆகிய நிலையில் புதிய வழிகாட்டிகள் வெளியிடப்பட்டுள்ளன.
தேசியப் பூங்காக் கழகத்தின் விலங்கு, கால்நடைச் சேவை ஏற்பாடு செய்த முதல் விலங்குத் தத்தெடுப்பு நிகழ்ச்சியில் வழிகாட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டன.
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28), ‘த பாஸ் இன் த சிட்டி’ என்ற தத்தெடுப்பு நிகழ்ச்சி மத்திய வர்த்தக வட்டாரத்தில் இடம்பெற்றது.
விலங்குகளின் சுகாதாரப் பராமரிப்புக்கான அடிப்படை தரநிலைகளையும் சிறந்த பழக்கவழக்கங்களையும் வழிகாட்டி எடுத்துரைக்கிறது.
விலங்குநல அமைப்புகளை எவ்வாறு நடத்துவது, விலங்குகளுக்கான சுற்றுப்புறத்தை எவ்வாறு பேணுவது போன்ற பல்வேறு அம்சங்களையும் வழிகாட்டி உள்ளடக்கியுள்ளது.
சிங்கப்பூரில் 15 விலங்குநல அமைப்புகள் செயல்படுகின்றன. அவற்றுள் சில அமைப்புகள் சுய நிதியில் இயங்குகின்றன. வேறு சில அமைப்புகள் பொதுமக்களின் நன்கொடையில் இயங்குகின்றன.
புதிய வழிகாட்டிகள் அறிமுகமாகும்முன் ஒவ்வோர் அமைப்பும் அவற்றின் சொந்த பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்தன.
விலங்குநல அமைப்புகள், கால்நடை மருத்துவர்கள், விலங்குப் பயிற்றுவிப்பாளர்கள் எனப் பல தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு வழிகாட்டிகள் உருவாக்கப்பட்டதாக விலங்கு, கால்நடைச் சேவை அமைப்பு குறிப்பிட்டது.
2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்வரை பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டிகள் தொடர்பில் பொதுமக்களிடமும் கருத்துகள் திரட்டப்பட்டன.
அதில் 600க்கும் மேற்பட்டோரிடமிருந்து கருத்துகள் திரட்டப்பட்டன. அவர்களில் கிட்டத்தட்ட 82 விழுக்காட்டினர் சிங்கப்பூரில் உள்ள விலங்குநல அமைப்புகளுக்கு வழிகாட்டிகள் உருவாக்கப்படவேண்டும் என்று தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் பெறப்பட்ட கருத்துகளை உள்ளடக்கி புதிய வழிகாட்டிகள் உருவாக்கப்பட்டன.


