தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜூரோங் ஈஸ்ட்-புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதி மசெக வேட்பாளர்கள் அறிமுகம்

3 mins read
5cde0783-3ee2-4d3b-a169-54fd08d27eee
ஜூரோங் ஈஸ்ட் - புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதியில் மசெக சார்பில் போட்டியிடவுள்ள (இடமிருந்து) புதுமுகம் டேவிட் ஹோ, போக்குவரத்து, சட்ட துணையமைச்சர் முரளி பிள்ளை, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மற்றும் சுகாதாரத் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம், ஹவ்காங் மசெக முன்னாள் தனித்தொகுதி வேட்பாளர் லீ ஹொங் சுவாங். - படம்: பெரித்தா ஹரியான்
multi-img1 of 2

ஜூரோங் ஈஸ்ட்-புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதியில் போட்டியிடும் தனது வேட்பாளர் அணியை மக்கள் செயல் கட்சி திங்கட்கிழமை (ஏப்ரல் 14) அறிவித்தது.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தலைமையில் ஜூரோங் ஈஸ்ட் - புக்கிட் பாத்தோக் குழுத் தொகுதியில் ஐவரைக் கொண்ட அணி களமிறக்கப்படுகிறது.

அணியில் இணைந்துள்ள இரண்டு புதுமுகங்களான தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் டேவிட் ஹோ, 37, முன்னாள் ஹவ்காங் தனித்தொகுதி மசெக வேட்பாளர் லீ ஹொங் சுவாங், 55, ஆகியோரை அமைச்சர் ஃபூ அறிமுகப்படுத்தினார்.

இவர்களுடன் தகவல், மின்னிலக்க மேம்பாடு, சுகாதாரத் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம், போக்குவரத்து, சட்ட துணையமைச்சர் முரளி பிள்ளை ஆகியோரும் அங்கு களமிறக்கப்படுகின்றனர்.

கல்வி, சட்டம், இளையர் மேம்பாடு, சமூக சேவை, பெண்கள், குடும்பநலன் எனப் பல்வேறு துறைகளில் அனுபவமுள்ள பலதரப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட தங்களது அணி, குடியிருப்பாளர்களின் தேவைக்கேற்ப ஆற்றலுடனும் பரிவுணர்வுடனும் பணியாற்றும் என்று அமைச்சர் ஃபூ கூறினார்.

ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சர் ஃபூ குழுத்தொகுதியில் போட்டியிடவிருக்கிறார்.

அமைச்சர் ஃபூ, 2006ஆம் ஆண்டில் அரசியலில் அடியெடுத்து வைத்ததிலிருந்து யூஹுவா தொகுதியைப் பிரதிநிதித்து வருகிறார். தனித்தொகுதியாக இருந்து வந்த யூஹுவா தொகுதி வரும் தேர்தலில் ஜூரோங் ஈஸ்ட்-புக்கிட் பாத்தோக் குழுத் தொகுதியுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

அதிபர் தர்மன் சண்முகரத்னம் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் அணியில் இல்லாத நிலையில், அவரின் இடத்தை நிரப்பும் மிகப் பெரிய பொறுப்பு தங்கள் அணிக்கு உள்ளதாக அமைச்சர் ஃபூ தெரிவித்தார்.

“அவரின் இடத்தில் செயல்படுவது எங்களுக்குக் கடினம். அப்படிச் செய்யும் எண்ணமும் எங்களிடம் இல்லை. நாங்கள் நாங்களாகவே இருந்து செயல்படுவோம். பணிவோடு வாக்காளர்களின் ஆதரவை வேண்டுகிறோம்,” என்றார் அமைச்சர்.

முன்னாள் ஆசிரியரான டேவிட் ஹோ தனியார் துறையில் சில ஆண்டுகள் பணியாற்றியதைத் தொடர்ந்து, தற்போது ‘மெஜுரிட்டி டிரஸ்ட்’ எனும் அறநிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

மசெக புதுமுகமான ‘மெஜுரிட்டி டிரஸ்ட்’ எனும் அறநிறுவனத்தின் இயக்குநர் டேவிட் ஹோ.
மசெக புதுமுகமான ‘மெஜுரிட்டி டிரஸ்ட்’ எனும் அறநிறுவனத்தின் இயக்குநர் டேவிட் ஹோ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தமக்குச் சிறுவயதாக இருந்தபோதே தம் பெற்றோர் பிரிந்துவிட்டதாகக் குறிப்பிட்ட திரு டேவிட், தம் தாயார் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பார்வையை இழந்துவிட்டதாகவும் சொன்னார். பணம் சம்பாதிக்க வேறு வழியின்றி, இருவரும் ஒரு காப்பிக்கடையில் மெல்லிழைத்தாள்களை விற்றனர்.

“எனக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டதால்தான் இன்று நான் ஓர் ஆசிரியராகவும் சமூக சேவகராகவும் இருக்கிறேன். இதே வாய்ப்புகளை மற்றவர்களுக்கும் வழங்கவே அரசியலில் சேர்ந்தேன்,” என்றார் டேவிட்.

மேற்குப் பகுதியில் வளர்ந்ததால் அவ்வட்டாரத்தைத் தாம் நன்கு அறிந்துள்ளதாகவும் கூறினார் சீருடற்பயிற்சி முன்னாள் தேசிய விளையாட்டாளர் லீ ஹொங் சுவாங்.

மசெக முன்னாள் ஹவ்காங் தனித்தொகுதி வேட்பாளர் லீ ஹொங் சுவாங், 55.
மசெக முன்னாள் ஹவ்காங் தனித்தொகுதி வேட்பாளர் லீ ஹொங் சுவாங், 55. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“குடும்பங்கள், இளையர்கள், மூத்த குடிமக்கள் போன்றோர்க்கும் பயனளிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்த விரும்புகிறேன்,” என்றார் அவர்.

புக்கிட் பாத்தோக்‌ தொகுதியில் 2000ஆம் ஆண்டு முதல் தொண்டூழியராகப் பணியாற்றி, 2016ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார் துணையமைச்சர் முரளி பிள்ளை.

பொருளியல் கவலைகள், வேலையின்மை பிரச்சினைகள், உள்ளூர் வர்த்தகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட குடியிருப்பாளர்களின் கவலைகளைத் தாம் நன்கு அறிந்திருப்பதாக அவர் சொன்னார்.

“இவை அனைத்தையும் திறம்படச் சமாளிக்க, கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட உறுதியான தலைமை நமக்குத் தேவை,” என்ற அவர், ஒரு வலுவான அரசாங்கத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் வட்டாரத்தை 2015ஆம் ஆண்டு முதல் பிரதிநிதித்து வருகிறார் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம். தங்களது குழு புதியது என்றாலும், குடியிருப்பாளர்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவோம் என அவர் உறுதியளித்தார்.

ஜூரோங் தொகுதியில், மசெக 2015 தேர்தலில் 79.29 விழுக்காட்டு வாக்குகளையும் 2020 தேர்தலில் 74.61 விழுக்காட்டு வாக்குகளையும் பெற்றது.

குறிப்புச் சொற்கள்