குடிமைத் தற்காப்புப் படையின் அவசர சேவையை மேம்படுத்த சிற்றறைகள் அறிமுகம்

2 mins read
8c457fb8-c765-41f1-85f8-5fc511e1f21f
ஜூரோங் லேக் தோட்டத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 26) நடந்த நிகழ்ச்சி ஒன்றில், முதல் சிற்றறையைக் குடிமைத் தற்காப்புப் படை அறிமுகம் செய்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த அவசர மருத்துவச் சேவைப் பணியாளர்கள், படைத் தளங்களுக்குத் திரும்புவதற்குப் பதிலாக அவசர அழைப்புகளுக்கு இடையே கூடிய விரைவில் நடமாடும் சிற்றறையில் (mobile pod) ஓய்வெடுக்க முடியும்.

பொதுவாக தீயணைப்பு நிலையங்கள், தீயணைப்புச் சாவடிகள், காவல் நிலையங்களிலிருந்து அவசர அழைப்புகளை ஏற்கச் செல்லும் அப்பணியாளர்களுக்குத் தற்காலிகமான தளமாக இந்தச் சிற்றறை விளங்கும்.

அவசர மருத்துவச் சேவைகளுக்கு அதிகரித்துவரும் தேவையைப் பூர்த்திசெய்ய குடிமைத் தற்காப்புப் படையின் திட்டங்களில் ஒரு பகுதியாக இந்தச் சிற்றறைகள் அமைகின்றன.

அவற்றைக் கட்டி முடிக்க ஆறு முதல் 12 மாதங்கள் வரை தேவைப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. சிற்றறைகளை வடிவமைக்க உள்ளூர் விற்பனையாளர்களுடன் இணைந்து தான் பணியாற்றியதாக அது கூறியது.

ஜூரோங் லேக் தோட்டத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 26) நடந்த நிகழ்ச்சி ஒன்றில், முதல் சிற்றறையை குடிமைத் தற்காப்புப் படை அறிமுகம் செய்தது. ஆறு மாத முன்னோட்டச் சோதனையின் ஓர் அங்கமாக, அது அங்கு மூன்று மாதங்களுக்கு வைக்கப்பட்டிருக்கும்.

முன்னோட்டத்தின் பிற்பாதியில் தோ பாயோ பொது நூலகத்திற்கு அந்தச் சிற்றறை இடமாற்றம் செய்யப்படும்.

தற்போது குடிமைத் தற்காப்புப் படையிடம் 95 அவசர மருத்துவ வாகனங்கள் உள்ளன.

அவசர மருத்துவச் சேவைக்கான தேவை அதிகரித்தால், லாரி பாரந்தூக்கியைக் கொண்டு சிற்றறைகளை மூன்று நாள்களுக்குள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குக் கொண்டுசெல்ல முடியும்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக சிற்றறைக்கு வெளியே நான்கு கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

பிப்ரவரி 28 முதல், ஜூரோங் லேக் தோட்டத்தில் உள்ள சிற்றறைக்குப் பக்கத்தில் அவசர மருத்துவ வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை அது இயங்கும்.

ஜூரோங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த அவசர மருத்துவச் சேவைப் பணியாளர்கள் அங்கு பணியில் நிறுத்தப்படுவர். வேலை நேரம் முடிந்தவுடன் அவர்கள் தங்கள் படைத்தளத்துக்குத் திரும்புவர்.

குறிப்புச் சொற்கள்