சிங்கப்பூரில் இயற்கை எரிவாயு சீராகக் கிடைக்க மேலும் ஒரு புதிய நிறுவனம் அறிமுகம் கண்டுள்ளது.
சிங்கப்பூர் கேஸ்கோ (Singapore GasCo) என்ற அந்த நிறுவனம் இயற்கை எரிவாயுவை வாங்குவதிலும் விநியோகிப்பதிலும் கவனம் செலுத்தும்.
இதனால் சிங்கப்பூரில் தடையின்றி மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும்.மேலும் கட்டுப்படியான விலையில் சேவை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் கேஸ்கோ நிறுவனம் முழுக்க முழுக்க அரசாங்கத்தின்கீழ் செயல்படும் நிறுவனமாக இருக்கும்.
எரிபொருள் தயாரிக்கும் நிறுவனங்களுடன் தொடர்கொண்டு இயற்கை எரிவாயுவை நல்ல விலையில் வாங்க ஒப்பந்தம் செய்யும் பணியில் சிங்கப்பூர் கேஸ்கோ ஈடுபடும்.
இதுகுறித்த தகவலை எரிசக்திச் சந்தை ஆணையமும் சிங்கப்பூர் கேஸ்கோ நிறுவனமும் இணைந்து புதன்கிழமை (மே 7) அறிக்கை வெளியிட்டன.
புதிய நிறுவனம் பல தரப்பிடம் இருந்து இயற்கை எரிவாயுவை வாங்கும் என்றும் சீராக எரிபொருள் விநியோகம் இருக்க நீண்ட நாள் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பல எரிபொருள் நிறுவனங்கள் நீண்ட நாள் ஒப்பந்தங்களை மேற்கொள்ளா. சந்தை நிலைமை ஏற்றத்தாழ்வாக இருக்கலாம் என்பதாலும் நிச்சயமற்ற சூழல் எப்போது வேண்டுமானலும் ஏற்படலாம் என்பதால் குறுகிய கால ஒப்பந்தங்களுக்கே நிறுவனங்கள் முன்னுரிமை வழங்குகின்றன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் 95 விழுக்காடு மின்சாரம் இயற்கை எரிவாயு மூலம் பெறப்படுகிறது.
சிங்கப்பூர் இரண்டு தரப்புகளிடமிருந்து இயற்கை எரிவாயுவைப் பெறுகின்றது. குழாய்மூலம் இயற்கை எரிவாயுவை மலேசியா மற்றும் இந்தோனீசியாவிடமிருந்து சிங்கப்பூர் வாங்குகிறது. திரவநிலை இயற்கை எரிவாயுவை சிங்கப்பூர் பல்வேறு நாடுகளிடமிருந்து வாங்குகிறது.
சிங்கப்பூர் கேஸ்கோ நிறுவனத்தைத் தொடங்குவது குறித்து எரிசக்திச் சந்தை ஆணையம் 2023ஆம் ஆண்டு அறிவித்தது.
சிங்கப்பூர் கேஸ்கோ தொடங்குவதற்கு முன்னர் சந்தையில் உள்ள முக்கியமான எரிபொருள் நிறுவனங்கள் குறித்து தீர ஆய்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.