கடந்த ஐந்து ஆண்டுகளில், கடுமையான வானிலை நிகழ்வுகளால் சிங்கப்பூர் வேலையிடத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாக மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்துள்ளார்.
“அவற்றில் ஒரு மரணம், பலத்த காற்றால் கொள்கலன் ஒன்று தள்ளப்பட்டு கவிழ்ந்ததில் ஏற்பட்டது. இதுபோன்ற விபத்து நேரக்கூடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்,” என்று அவர் கூறினார்.
மற்ற இரண்டு மரணங்களும் மின்னல் தாக்கியதால் ஏற்பட்டன.
சிங்கப்பூரில் கடும் வானிலை நிகழ்வுகளால் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், புதிய வழிகாட்டிகளை மனிதவள அமைச்சும் வேலையிடப் பாதுகாப்பு மன்றமும் இணைந்து வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) அறிமுகப்படுத்தின.
பலத்த காற்று, வெள்ளம், மின்னல், வெப்ப அழுத்தம், மூடுபனி ஆகியவை ஏற்படும்போது வேலையிடப் பாதுகாப்புக் குறைபாடுகளைச் சமாளிப்பதற்கான பரிந்துரைகள் இவற்றில் வழங்கப்படும்.
அங் மோ கியோவில் ‘சென்ட்ரல் வீவ்’ எனும் பெயர்கொண்ட தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடுகளின் கட்டுமானத் தளத்தைப் பார்வையிட்ட திரு ஸாக்கி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“சிங்கப்பூர் வானிலையின் கணிக்க முடியாத தன்மையை நாம் கருத்தில்கொள்ள வேண்டும். ஒரே நாளில் வானிலையில் கடும் மாற்றங்கள் ஏற்படுவதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்,” என்றார் அவர்.
கடும் வானிலை நிகழ்வு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, பணியிடத்தில் ஏற்படும் இடையூறுகளைப் பாதுகாப்பான முறையில் குறைப்பதையும் புதிய வழிகாட்டிகள் நோக்கமாக கொண்டுள்ளன என்றார் திரு ஸாக்கி.
தொடர்புடைய செய்திகள்
புதிய வழிகாட்டிகள், முதலாளிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊக்குவிக்கின்றன. வானிலை அபாயங்களை மதிப்பிடுதல், அவை ஏற்படும் சமயத்தில் அவற்றை எதிர்கொள்ள திட்டம் வகுப்பது, தெளிவான தொடர்பை உறுதிசெய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அதில் அடங்கும்.
வழக்கமான பாதுகாப்புப் பரிசோதனைகளை நடத்துவதும், தற்காலிகக் கட்டமைப்புகளை உறுதியாக பொருத்துவதும், ஒப்பந்ததாரர்களுடன் தொடர்பில் இருப்பதும் முக்கியம் என்றும் அவை குறிப்பிடுகின்றன.
மேலும், அவசர காலத்தில் தேவைப்படும் கருவிகளையும் பொருள்களையும் கொண்டிருக்கும் ‘கடும் வானிலை’ தொகுப்புகளை அமைத்துக்கொள்ளுமாறு மனிதவள அமைச்சு நிறுவனங்களிடம் பரிந்துரைக்கிறது.
கட்டுமானம், கடல்சார், வேதியியல் தொழில்துறைகளைச் சேர்ந்த பங்குதாரர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் புதிய வழிகாட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவை கட்டாயமாக பின்பற்ற வேண்டியவை அல்ல என்றாலும், முதலாளிகளும் ஊழியர்களும் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்திற்கு இணங்குவது அவசியம் என்று திரு ஸாக்கி வலியுறுத்தினார்.
பணியிடங்களில் வழக்கமான சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பாதுகாப்பில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை ஏற்பட்டபோது வெப்ப அழுத்தத்தை அனுபவித்த சம்பவத்தை கடந்த 7 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றிவரும் வெளிநாட்டு ஊழியர் நாகராஜன் செந்தில்குமார், 30, நினைவுகூர்ந்தார்.
சற்று நேரம் ஓய்வெடுத்த பிறகும், அவரின் உடல்நலம் மேம்படவில்லை என்பதால் அவர் வீட்டுக்குச் செல்ல வேண்டியிருந்ததாக சொன்னார்.
‘வீகோ’ கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றும் திரு நாகராஜன், அவரது நிறுவனம் புதிய வழிகாட்டிகளுக்கு ஏற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை அண்மையில் செயல்படுத்தியுள்ளதாகவும் இதனால் ஊழியர்களின் பாதுகாப்பு வலுவடைந்துள்ளதாகவும் கூறினார்.