எதிர்வரும் பொதுத்தேர்தலில் தங்கள் கட்சியின் சார்பில் ஜாலான் புசார் நாடாளுமன்றக் குழுத்தொகுதியில் களமிறங்கவுள்ள வேட்பாளர்களை மக்கள் செயல் கட்சி அறிமுகம் செய்துள்ளது.
அமைச்சர் ஜோசஃபின் டியோ, மேயர் டெனிஸ் புவா, வான் ரிஸால், ஷான் லோ ஆகியோர் போட்டியிடவுள்ளதாக ஏப்ரல் 16ஆம் தேதி வாம்போ பூங்காவில் நடைபெற்ற சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.
இவர்களுள் ஷான் லோ புதுமுகம். கடந்த 24 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய தற்காப்பு அமைச்சின் மூத்த துணை அமைச்சரான ஹெங் சீ ஹாவுக்குப் பதிலாக இவர் களமிறங்குகிறார்.
“சிங்கப்பூர் சுதந்திரமடைந்து அறுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. நம்மைச் சுற்றிப் பல்வேறு முக்கிய மாற்றங்கள் நடைபெறுவது கண்கூடாகத் தெரிகிறது. அதைக் குறித்து அதிகம் பேசப்போவதில்லை என்றாலும், அம்மாற்றங்கள் குடியிருப்பாளர்களுக்காக வகுக்கப்படும் திட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்றார் அமைச்சர் டியோ.
கடந்த ஐந்தாண்டுகளில் வட்டாரக் குடியிருப்பாளர்கள் குடும்பத்தினர் போலாகிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த காலத்தில் நடைபெற்ற மாற்றங்களைக் குறித்துப் பேசியதுடன், எதிர்காலத்திற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து ஹெங் சீ ஹாவின் நீண்டகால சேவைக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
“கடின உழைப்புடன், ஒரே நோக்கத்தையொட்டி செயல்படும் குழு இது,” என்று சொன்ன மத்திய சிங்கப்பூர் வட்டார மேயர் டெனிஸ் புவா, சிங்கப்பூரை அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாக மேம்படுத்தும் பணிகளில் ஆர்வம் கொண்டுள்ளதாகச் சொன்னார்.
துடிப்பான வட்டாரம், சமூகப் பிணைப்பு ஆகியவற்றுடன் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் சமூகத்தை உருவாக்குவதில் தங்கள் குழு கவனம் செலுத்துவதாகச் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
கிரேத்தா ஆயர், கம்போங் கிளாம், வாம்போ பூங்கா என வெவ்வேறு வட்டாரங்களில் இவற்றையொட்டிய திட்டங்கள் நடைபெறுவதையும் டெனிஸ் புவா சுட்டிக்காட்டினார் .
கல்வி, வேலைவாய்ப்புத் திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், ‘ஹொரைசான்ஸ் அட் ஜாலான் புசார்’ எனும் இளம் மாணவர்களுக்கான கல்விப் பறிமாற்றத் திட்டம்மூலம் பல மாணவர்கள் பலனடைந்துள்ளதாகவும் அவர்கள் தற்போது சமூகத்திற்குப் பணியாற்றி வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஐந்தாண்டுகளாகச் சமூகத்தினருடனும், சமூகப் பங்காளிகளுடனும் இணைந்து பணியாற்றுவதாகக் கூறிய வான் ரிஸால், இளையர்களுக்காகவும் மனநலம், சமூக நலனுக்காகவும் பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஜாலான் புசார் நகர மன்றத் தலைவரான அவர், “இவ்வட்டாரத்தில் பல உள்கட்டமைப்பு மேம்பாடுகள் நடந்துள்ளன. குறைந்தது நான்கு பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்தை மேம்படுத்த ஆறு புதிய எம்ஆர்டி நிலையங்கள் வரவுள்ளன. பீஷான் வட்டாரத்திலிருந்து நடந்தும், மிதிவண்டியிலும் வட்டாரத்தைச் சுற்றிவரப் பாதைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன,” என்றார்.
மனநலன், நீடித்த நிலைத்தன்மை, பசுமை நகர்த் திட்டம் உள்ளிட்டவற்றில் பங்களிக்க வாய்ப்பு கிடைத்ததைச் சுட்டிய அவர், பல புத்தாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் சுட்டினார்.
கடந்த ஐந்தாண்டுகள் ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
நான்கு குழந்தைகளுக்குத் தந்தையான தனக்கு இளம் பெற்றோர்கள் சந்திக்கும் சவால்கள் நன்கு தெரியும் என்று சொன்ன ஷான் லோ, அவற்றுக்கான திட்டங்களில் பணியாற்ற விரும்புவதாகச் சொன்னார்.
குழந்தைகள் பராமரிப்பு மையம் வீடுகளிலிருந்து நடந்துசெல்லும் தொலைவில் இருப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதாகச் சொன்ன அவர், தேர்ந்தெடுக்கப்பட்டால் இளம் பெற்றோர் சந்திக்கும் சவால்கள் தொடர்பில் பணியாற்ற விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
பொதுத்துறையிலும், தனியார்துறையிலும் அனுபவம் உள்ளது என்றும், நிறுவனங்கள் தரப்பு, கொள்கை வகுப்பாளர்கள் தரப்பு என இருதரப்பு அனுபவம் இருப்பது தனது பங்களிப்பிற்கு உதவும் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து மக்கள் தனக்களித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்த ஹெங் சீ ஹாவ் இளம் தலைமுறையைச் சேர்ந்த லோ இவ்விடத்திற்கு வருவது பொருத்தமானது என்றார்.