உடற்குறையுள்ள 250 பேர் சுயமாக வாழ உதவும் முன்னோடித் திட்டம் அறிமுகம்

2 mins read
dd9d8b62-1def-47c3-92a9-d5abe5f59e38
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா, உடற்குறையுள்ளோருடன் கலந்துரையாடினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உடற்குறையுள்ள 250 பேர் வரை சமூகத்தில் சுயமாக வாழ்வதற்கு உதவும் முன்னோடித் திட்டம் அறிமுகம் கண்டுள்ளது.

வரும் ஆண்டுகளில் பராமரிப்பு, பயிற்சி சேவைகளுடன் மற்ற உதவிகளும் அவர்களுக்கு வழங்கப்படும்.

‘எனேபல்ட் லிவிங் புரோகிராம்’ என்னும் புதிய முன்னோடித் திட்டத்தில் அந்த 250 பேரும் 2025ஆம் ஆண்டு முதல் 2028ஆம் ஆண்டு வரை சேர்ந்து பயன்பெறலாம்.

சொந்த வீட்டில் வசித்தாலும் வீடமைப்புக் கழக வாடகை வீட்டில் வசித்தாலும் அவர்களுக்கு ஆதரவு கிடைக்கும்.

சமூகத் திறன்களைப் பெறுவதற்கான பயிற்சி, அன்றாட நடவடிக்கைகளில் பராமரிப்பு உதவி, நேரடிக் கண்காணிப்பு போன்றவை அவரவர் தேவைக்கு ஏற்ப வழங்கப்படும்.

உடற்குறை உள்ள மக்களுக்கான வசிப்பிடம் மற்றும் பராமரிப்பு தொடர்பான பணிக்குழு பரிந்துரைத்ததற்கு இணங்க இந்த முன்னோடித் திட்டம் செயலுக்கு வருகிறது.

பெரியோர்களாக இருப்பதுடன் கணிசமான உதவி தேவைப்படுவோராகவும் சமூகத்துடன் கலந்து வாழ்வதற்கான ஆதரவு தேவைப்படுவோராகவும் இருப்போருக்கு இந்த முன்னோடித் திட்டம் கைகொடுக்கும்

இந்த முன்னோடித் திட்டத்தை வடிவமைத்து அமல்படுத்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் எஸ்ஜி எனேபல் அமைப்பும் இணைந்து பணியாற்றும்.

சமூகத்தில் உடற்குறையுள்ளோர் சுயமாக வாழத் தேவையான உதவிகள் என்னென்ன என்பதையும் இவ்விரு அமைப்புகளும் ஆராயும்.

தற்போதைய நிலையில் பெரும்பாலான உடற்குறையுள்ளோர் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் வசிக்கின்றனர்.

பகல் நேர நடமாட்ட நிலையங்களிலும் அரங்கத்திற்குள் நிகழும் பயிலரங்குகளுக்கும் பதிவு செய்துள்ளோரில் மூன்றில் ஒரு பங்கினர் அல்லது 1,000 பேர் குறைந்தபட்சம் ஒரு பராமரிப்பாளரைப் பெற்ற 65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருக்கிறார் என்று ‘உடற்குறையுள்ளோர் சமூகத்துடன் வாழ்வதற்கான பணிக்குழு’ திங்கட்கிழமை (செப்டம்பர் 16) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

குறிப்புச் சொற்கள்