சிங்கப்பூர் கடற்படையின் இரண்டாவது பலதிறன் போர்க்கப்பல் அறிமுகம்

சிங்கப்பூர் கடற்படையின் இரண்டாவது பலதிறன் போர்க்கப்பல் அறிமுகம்

2 mins read
40a52568-8486-4314-98f7-153e871da2f2
புதிய கப்பல்கள் ஏறத்தாழ 7,000 கடல் மைல் தூரம் வரை சென்று, 21 நாள்களுக்கும் மேலாகத் தொடர்ந்து பணியாற்றும் திறன் கொண்டவை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் குடியரசு கடற்படை தனது இரண்டாவது பலதிறன் போர்க்கப்பலான ‘வேலர்’ கப்பலை வியாழக்கிழமையன்று (ஜூலை 23) அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியது. முதலாவது போர்க்கப்பலான ‘விக்டரி’ அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது.

பெனாய் கப்பல் பட்டறையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எஸ்டி எஞ்சினியரிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வின்சென்ட் சோங் கலந்துகொண்டார். முதலாவது கப்பலைக் கட்டிய அனுபவத்தைப் பயன்படுத்தி, இரண்டாவது கப்பல் மூன்று மாதங்களில் விரைவாகக் கட்டி முடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம், தற்போதைய அனைத்துலகச் சூழலில் கடல்வழி வர்த்தகப் பாதைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது நாட்டின் வாழ்வாதாரத்துக்கு மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்தினார்.

இந்தக் கப்பல்கள் ஏறத்தாழ 7,000 கடல் மைல் தூரம் வரை சென்று, 21 நாள்களுக்கும் மேலாகத் தொடர்ந்து பணியாற்றும் திறன் கொண்டவை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த வரிசையில் மூன்றாவது மற்றும் நான்காவது கப்பல்களுக்கான கட்டுமானப் பணிகள் மூன்று மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டதாக அவர் கூறினார்.

புதிய வகை போர்க்கப்பல்கள் பல்வேறு ஆளில்லா இயங்குதளங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை தற்போதைய ஏவுகணைச் சிறுகப்பல்களுக்குப் பதிலாக 2028ஆம் ஆண்டு முதல், கட்டம்கட்டமாகச் சேவையில் சேர்க்கப்படும். எஸ்டி எஞ்சினியரிங் நிறுவனம் இந்தக் கப்பல்களை உள்ளூரிலேயே கட்டியமைத்து வருகிறது. இது சிங்கப்பூரின் தற்காப்புத் தொழில் மற்றும் பொறியியல் வல்லமையை வெளிப்படுத்துகிறது. இந்த ‘வேலர்’ கப்பலின் கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கர்னல் திமத்தி லோ செயல்படுவார்.

குறிப்புச் சொற்கள்