மர மேலாண்மைக்கான சிங்கப்பூரின் முதல் தேசிய தரநிலை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், நகரத்தில் உள்ள மரங்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க சிறந்த கவனிப்பைப் பெறும்.
ஜூலை 1ஆம் தேதி முதல், தேசிய பூங்காக் கழகத்துடன் மர வளர்ப்புப் பணிகள் தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுபவர்கள், நகர்ப்புறங்களில் உள்ள வெப்பமண்டல மரங்களைக் கத்தரிப்பதற்கான தரநிலையைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
விதிமீறும் ஒப்பந்தக்காரர்கள் நிர்வாகக் கட்டணங்களைச் செலுத்த நேரிடலாம். அவர்களின் நற்பெயர் பாதிக்கப்படலாம், பிற தண்டனைகளையும் எதிர்கொள்ள நேரிடலாம் என்று தேசிய பூங்காக் கழகத்தின் தெரு பசுமை வடிவமைப்புக்கான குழும இயக்குநர் ஓ சியோவ் ஷெங், செவ்வாழ்க்கிழமை (ஜூன் 30) ஊடகங்களிடம் தெரிவித்தார்.
மரங்களைப் பலவீனப்படுத்தி, அவற்றின் சுற்றுச்சூழல் செயல்பாட்டைக் குலைக்கும் தவறான கத்தரிப்பு முறைகளைக் களைய இந்த நடைமுறை விதி உதவுகிறது.
கழகம், தீவு முழுவதும் ஏறக்குறைய 7 மில்லியன் மரங்களுக்குப் பொறுப்பாக உள்ளதுடன், பசுமைப் பகுதிகளின் தரைப் பராமரிப்பில் பெரும்பாலானவற்றை வெளி நிறுவனங்களுக்கு வழங்குகிறது.
இந்தத் தரநிலையானது, மரங்கள் சாய்வதற்கோ, கிளைகள் முறிவதற்கோ வழிவகுக்கும் அளவுக்கு அதிகமாகக் கத்தரிப்பதைத் தவிர்க்க, பல்வேறு வகையான மர உரிமையாளர்களுக்கு உதவும் என்று திரு ஓ கூறினார்.
பருவநிலை மாற்றத்தால் சிங்கப்பூரில் மரங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மேலும் அதிகரித்துள்ள நிலையில் இது அறிமுகமாகியுள்ளது. வரும் ஆண்டுகளில் சிங்கப்பூர் அதிக மழைப்பொழிவு, தீவிரமான காற்றின் வேகத்தை எதிர்கொள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சரியான கத்தரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை இந்தத் தரநிலை உறுதி செய்யும். இது, மரங்கள் தீவிர வானிலை நிகழ்வுகளைத் தாங்கக்கூடிய வலுவான கட்டமைப்பைத் தக்கவைத்துக்கொள்ள உதவும் என்று திரு ஓ கூறினார்.
தேசிய பூங்காக் கழகம், சிங்கப்பூர் நிலவனப்புத் தொழில் சங்கம் ஆகியவற்றின் தலைமையிலான ஒரு பணிக்குழுவால் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தத் தரநிலையை, மேலும் 13 அமைப்புகளும் அரசாங்க நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ளும்.
அவற்றில் தற்காப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு, ஜேடிசி கார்ப்பரேஷன், தேசிய சுற்றுப்புற வாரியம், செந்தோசா வளர்ச்சிக் கழகம், சிங்கப்பூர் நில ஆணையம், ஸ்போர்ட் சிங்கப்பூர் ஆகியவை அடங்கும்.

