புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ‘ஹெல்த்ஹப்’ செயலி அறிமுகம்

புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ‘ஹெல்த்ஹப்’ செயலி அறிமுகம்

படம்: சாவ்பாவ்

25 Nov 2026 - 5:29 pm

2 mins read

சிங்கப்பூரின் மூன்று பொதுச் சுகாதாரக் குழுமங்களின்கீழ் உள்ள 28 பலதுறை மருந்தகங்களிலும் முன்பதிவு நேர இருப்பை அறியும் வசதியுடன் மேம்படுத்தப்பட்ட ‘ஹெல்த்ஹப்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் புதன்கிழமை (நவம்பர் 25) நடைபெற்ற நிகழ்ச்சியில், சுகாதார அமைச்சரும் சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஓங் யி காங் அதனை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்தார்.

புதிய ‘போக்குவரத்து விளக்கு’ முறைமூலம் மருந்தகங்களில் மருத்துவரைச் சந்திப்பதற்கு முன்பதிவுக்கான நேர ஒதுக்கீடு குறித்து அறியலாம்.

பச்சை நிறம் இடங்கள் இருப்பதையும், மஞ்சள் நிறம் இடங்கள் குறைவாக உள்ளதையும், சிவப்பு நிறம் இடங்கள் நிரம்பிவிட்டதையும் குறிக்கும்.

காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளவர்கள் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலான நேரத்திற்கு முன்பதிவு செய்யலாம்.

மேலும், குளிர்பதனப் பெட்டியில் வைக்க வேண்டியவைத் தவிர, பிற மருந்துகளை வீட்டு வாசலிலேயே பெற்றுக்கொள்ளலாம்.

‘பேநவ்’, ‘ஆப்பிள் பே’, ‘கூகல் பே’ வழியாகப் பல கட்டணங்களை ஒரே பரிவர்த்தனையில் செலுத்தவும் விவரங்களைச் சேமிக்கவும் முடியும்.

ரத்தக் கொழுப்பு, ரத்த அழுத்த விவரங்கள், மின்னிலக்க மருத்துவச் சான்றிதழ்கள் ஆகியவற்றையும் பதிவிறக்கம் செய்யலாம்.

என்எச்ஜி ஹெல்த், தேசிய பல்கலைக்கழக சுகாதார அமைப்பு (என்யுஎச்எஸ்), சிங்ஹெல் ஆகிய செயலிகள் 2027ஆம் ஆண்டு பிப்ரவரிக்குள் படிப்படியாக நிறுத்தப்படும்.

‘ஹெல்த்ஹப்’ செயலி நவம்பர் 22ஆம் தேதி மேம்பாடு கண்டது. அப்போதிலிருந்து கிட்டத்தட்ட 200,000க்கும் மேற்பட்டோர் அதனைப் பயன்படுத்தியுள்ளனர்.

குடியிருப்பாளர்கள் தங்கள் உடல்நலனில் கூடுதல் அக்கறை செலுத்த அச்செயலி உதவும் என சினாப்ஸ் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி ஆலன் கோ நம்பிக்கை தெரிவித்தார்.

மேம்படுத்தப்பட்ட செயலியைத் திறம்படப் பயன்படுத்த மூத்தோருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தொலைபேசி உதவிச் சேவையும் பலதுறை மருந்தகங்கள், மருத்துவமனைகள், எஸ்ஜி மின்னிலக்கச் சமூக நடுவங்கள் ஆகியவற்றில் நேரடி வழிகாட்டலும் வழங்கப்படும்.

செயலியின் அமைப்புகள் நவீனப்படுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ஓங், ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும் ‘ஹெல்தி 365’ செயலியின் அம்சங்களை இணைப்பது குறித்தும் அதிகாரிகள் ஆராய்கின்றனர் என்றார்.

சிங்கப்பூரர்களுக்குப் பயனளித்து அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதே எங்களது நோக்கம் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்