கொவிட்-19 கொள்ளைநோய் காலகட்டத்தை அடுத்து காவல்துறையின் மிகப் பெரிய சோதனை நடவடிக்கைகளில் ஒன்று, கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டது.
அதில் 1,800க்கும் மேற்பட்டோரை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
விசாரிக்கப்பட்டவர்களில் இதுவரை 600க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பலதரப்பட்ட சட்டவிரோதச் செயல்களைக் குறிவைக்கும் விதமாக இந்த அமலாக்கச் சோதனைகள் நடத்தப்பட்டன. பாலியல் தொழிலில் ஈடுபடுதல், சட்டவிரோதச் சூதாட்டம், மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்துதல், மது அருந்திவிட்டு வாகனமோட்டுதல், போதைப்பொருள்கள், விதிமுறைக்கு உட்படாத வகையில் அமைந்த தனிநபர் நடமாட்டச் சாதனங்களை ஓட்டுதல் போன்றவை அவற்றில் அடங்கும்.
ஆண்டிறுதி விழாக்காலத்தின்போது குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் காவல்துறை 2,600க்கும் மேற்பட்ட அதிகாரிகளைச் சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டது. நவம்பர் 16 முதல் டிசம்பர் 16 வரை கிட்டத்தட்ட 13,200 பேரிடம் சோதனைகள் நடத்தப்பட்டன.
அந்த நான்கு வாரங்களில் அதிகாரிகள் 1,180க்கும் அதிகமான அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு மொத்தம் 1,873 பேரை விசாரணைக்கு உட்படுத்தினர். விசாரிக்கப்பட்டவர்களின் வயது 15 வயதுக்கும் 85 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்களில் 1,257 ஆண்களும் 616 பெண்களும் அடங்குவர்.
இவர்களில் குறைந்தது 610 பேர் இதுவரை கைதாகியுள்ளனர்.
இந்தச் சோதனை நடவடிக்கைகளில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, குடிநுழைவு மற்றும் சோதனைச்சாவடி ஆணையம், சுகாதார அறிவியல் ஆணையம், தேசிய சுற்றுப்புற வாரியம், சிங்கப்பூர் சுங்கச்சாவடி, நிலப் போக்குவரத்து ஆணையம், சிங்கப்பூர் உணவு அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளும் காவல்துறையினருக்கு ஆதரவளித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
சிலிகி ரோடு, பாலஸ்டியர், தாம்சன் ரோடு, ராபர்ட்சன் கீ, ஆர்ச்சர்ட் ரோடு, வாம்போ ஆகிய பகுதிகளிலுள்ள பொது உல்லாசக்கூடங்களிலும் ஹோட்டல்களிலும் பல்வேறு உடற்பிடிப்பு நிலையங்களிலும் அமலாக்கச் சோதனைகள் நவம்பர் 20 முதல் 23 வரை மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து காவல்துறையினர் 25 பெண்களையும் 3 ஆண்களையும் கைது செய்தனர்.
லிட்டில் இந்தியா, சைனாடவுன், போட் கீ, பூகிஸ் போன்ற இடங்களில் உள்ள உடற்பிடிப்பு நிலையங்களிலும் பொது உல்லாசக் கூடங்களிலும் தனியார் வீடுகள், ஹோட்டல்களிலும் நவம்பர் 25 முதல் 30 வரை நடந்துவந்த சட்டவிரோத நடவடிக்கைகளை அதிகாரிகள் குறிவைத்ததை அடுத்து பல்வேறு குற்றங்களுக்காக 54 ஆண்களையும் 140 பெண்களையும் கைதுசெய்தனர்.
பெண்கள் ஆடை அணிந்த ஆறு ஆண்களும் இதில் அடங்கினர். லிட்டில் இந்தியாவிலுள்ள கடைவீடு ஒன்றில் பாலியல் நடவடிக்கைகள் தொடர்பான சந்தேகத்தில் அவர்கள் கைதாயினர்.
இதற்கிடையே, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக வலுவான அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெள்ளத்தெளிவான எச்சரிக்கையைத் தெரிவிக்கும் வகையில் விழாக்காலத்தின்போது இந்த குற்றத் தடுப்பு முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக காவல்துறை மூத்த உதவி ஆணையர் கிரெகரி டான் கூறினார்.