பங்குச் சந்தை மோசடி புரிந்த நிர்வாகிகளின் விசாரணை தொடங்கியது

பங்குச் சந்தை மோசடி புரிந்த நிர்வாகிகளின் விசாரணை தொடங்கியது

2 mins read
112df73d-e75a-437b-815b-894c236b6990
முன்னாள் பிரதமர் கோ சோக் டோங்கின் மகனான கோ ஜின் ஹியான், 56, நியூ சில்க்ரூட்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகியாக 2015 முதல் 2020 வரை பணியில் இருந்தார். - படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நியூ சில்க்ரூட்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றிய கோ ஜின் ஹியான் மீதும் மற்றொரு அதிகாரி மீதும் குற்றவியல் விசாரணை, புதன்கிழமை (பிப்ரவரி 4) மதியம் தொடங்கியது.

முன்னாள் சிங்கப்பூர் பிரதமரான திரு கோ சொக் டோங்கின் 56 வயது மகனான கோ ஜி ஹியான், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

அதே நிறுவனத்தில் பணியாற்றிய கெல்வின் ஊ சியோங் குவான் மீதும் குற்றவியல் விசாரணை நடத்தப்படுகிறது.

கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோ, ஊ சியோங் குவான், முன்னாள் நிதி இயக்குநர் வில்லியம் டியோ தியாம் சுவான், பங்குச் சந்தையில் நிதி இருப்புகளை உறுதிசெய்ய நியமிக்கப்பட்ட ஜிடிசி குழுமத்தின் ஒரே இயக்குநர் ஹுவாங் யீவென் ஆகியோர் மீது போலி வர்த்தகம் சம்பந்தமான 132 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி, டியோவுக்கு 12 வார சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அவர்மீது சுமத்தப்பட்ட 25 கூடுதல் குற்றச்சாட்டுகள் தண்டனையின்போது கவனத்தில் வைக்கப்பட்டன.

கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஹுவாங்குக்கு இரண்டு ஆண்டு மூன்றரை மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மீது சுமத்தப்பட்ட 24 குற்றங்களையும் அவர் ஒப்புக்கொண்டார். மேலும் 88 குற்றங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

நீதிமன்றத் தீர்ப்பு சம்பந்தப்பட்ட ஆவணங்களில், சந்தையில் நடந்த மோசடித் திட்டத்துக்கு கோ தலைமை தாங்கியதாக அரசாங்க வழக்கறிஞர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

கடந்த 2020ஆம் ஆண்டில் நிறுவனத்தில் வகித்த அவரது பதிவியில் இருந்து கோ விலகிவிட்டார். அந்த நால்வரில் ஒவ்வொருவர் மீதும் நியூ சில்க்ரூட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை லாபம் ஈட்டுவதுபோல போலியாக கட்டமைத்த 31 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்று காவல்துறை கூறியுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அந்நிறுவனத்தின் பங்குகள் ரத்து செய்யப்பட்டன. கோவுக்கு $150,000யும் ஊவுக்கு $70,000 யும் பிணைத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டு சிறையுடன் $250,000 அபராதமும் இருவருக்கும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்