‘மைடிரான்ஸ்போர்ட்.எஸ்ஜி’ கைப்பேசிச் செயலியில் பேருந்து வருகை நேரத்தைக் காட்டும் சேவை செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) 95 நிமிடங்களுக்கு முடங்கியது குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) விசாரித்து வருகிறது.
சேவையில் ஏற்பட்ட கோளாறு கைப்பேசிச் செயலியில் மட்டுமல்லாது பேருந்து நிலையத் திரைகளிலும் காணப்பட்டதை அறிந்து அதுகுறித்து காலை 6.15 மணியளவில் பொதுமக்களிடம் தெரிவித்ததாக ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் புதன்கிழமை (ஜூலை 15) கூறினார்.
பயணத் திட்டமிடல் செயலியான ‘மைடிரான்ஸ்போர்ட்.எஸ்ஜி’யில் மட்டும் அந்தக் கோளாறு ஏற்பட்டிருந்தது.
‘சிம்ப்ளிகோ’, ‘எஸ்ஜி நெக்ஸ்ட் பஸ்’ போன்ற மூன்றாம் தரப்புச் செயலிகளிலும் பேருந்து நிறுத்தங்களின் திரைகளிலும் பேருந்து வருகை நேரம் சரியாகக் காட்டப்பட்டதாக அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.
“அதேபோல, பேருந்துச் சேவைகளும் அதனதன் நேரப்படி சரியாக இயங்கின. எனவே, ‘மைடிரான்ஸ்போர்ட்.எஸ்ஜி’ செயலியில் ஏற்பட்ட கோளாறு குறித்து விசாரித்து வருகிறோம்,” என்றார் அவர்.
95 நிமிடக் கோளாறுக்குப் பின்னர் காலை 7.40 மணியளவில் பேருந்து வருகை நேரம் அந்தச் செயலியில் சரியாகக் காட்டப்பட்டது என்றும் அவர் கூறினார்.
பேருந்து வருகை நேரங்களைக் காண்பிப்பதில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக ஜூலை 14 அன்று ‘மைடிரான்ஸ்போர்ட்.எஸ்ஜி’ இணையத்தளம் வாயிலாக ஆணையம் தெரிவித்தது. பேருந்துச் சேவைகள் வழக்கம்போல இயங்குவதாகவும் அதில் அது குறிப்பிட்டது.
கடந்த ஜனவரி மாதத்திலும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பேருந்து நிறுத்தங்களிலும் செயலிகளிலும் தவறான நேரங்களும் நீண்ட காத்திருப்பு நேரங்களும் காட்டப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, பேருந்து வருகை நேரத்தைக் காட்டும் அமைப்பு ஜனவரி 21ஆம் தேதி மீண்டும் தொடங்கப்பட்டது. அந்தப் பணியின்போது பேருந்து நிறுத்தங்களின் திரைகள் மற்றும் செயலிகளால் பேருந்து நேரங்கள் குறித்த தகவல்களைக் காட்ட இயலவில்லை.
அதன் பின்னர் ஜூன் 12ஆம் தேதி, பேருந்து வருகை நேரத்தைக் காட்டும் அமைப்பில் நான்கு மணி நேரத்திற்குமேல் சேவைத் தடங்கல் ஏற்பட்டது.

