பேருந்துகளின் இருப்பிடத் தரவுகளை அனுப்புவதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒளியிழைக் (‘ஃபைபர்-ஆப்டிக்’) கம்பிவடம் செயலிழந்தது குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இத்தகவலை, போக்குவரத்துத் தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் புதன்கிழமை (மே 6) நாடாளுமன்றக் கேள்விக்கான எழுத்துபூர்வ பதிலில் தெரிவித்தார்.
ஏப்ரல் மாதம் கட்டுமானப் பணிகளால் பல்வேறு கம்பிவடங்கள் சேதமடைந்ததைத் தொடர்ந்து பேருந்துகளின் வருகை நேரத்தைக் காட்டும் கணினி முறையில் இடையூறுகள் நிகழ்ந்தன.
மேலும், சிங்கப்பூரின் சில பகுதிகளில் விரிவலை இணையச் சேவைகளிலும் அது பாதிப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து ஒளியிழைக் கம்பிவடம் பயன்படுத்தப்பட்டபோதும் அது சரிவரச் செயல்படவில்லை.
அது குறித்துப் பாட்டாளிக் கட்சியின் செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹி டிங் ரு கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்குத் திரு சியாவ் அளித்த பதிலில், “முதன்மைக் கம்பிவடம் செயலிழந்தால் தரவுகளை மாற்றுக் கம்பிவடத்திற்கு அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட தனித்துவ ஒளியிழைக் கம்பிவடங்கள் மூலம் அத்தகைய தரவுகள் அனுப்பப்படுகின்றன,” என்றார்.
மேலும், “ஏப்ரல் 18ஆம் தேதி, ஏஷியா பைலிங் நிறுவனம் பேருந்துகள் குறித்த தகவல்களைப் பரிமாறும் கம்பிவடம் உட்படப் பல ஒளியிழைக் கம்பிவடங்களைச் சேதப்படுத்தியதால், பேருந்துகளின் இருப்பிடம் தொடர்பான தரவுகள் அனுப்பப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
“அதன் காரணமாக, அன்றைய நாளின் எஞ்சிய நேரத்தில் பேருந்து வருகை நேரத் தகவல் அமைப்பு 70 விழுக்காட்டுத் திறனில் மட்டுமே இயங்கியது,” என்று திரு சியாவ் விளக்கினார்.
“பேருந்து நிறுத்தங்களிலும் கைப்பேசிச் செயலிகளிலும் காட்டப்படும் பேருந்து வருகை நேரங்கள் துல்லியமாகக் கணிக்கப்படவில்லை. அதனால், காத்திருப்பு நேரங்கள் நீண்டதாகக் காட்டப்பட்டன,” என்றார் அவர்.

