சிங்கப்பூரில் பாதுகாவலர்களை வசைபாடிய ஹாங்காங் பள்ளி முதல்வரிடம் விசாரணை

சிங்கப்பூரில் பாதுகாவலர்களை வசைபாடிய ஹாங்காங் பள்ளி முதல்வரிடம் விசாரணை

2 mins read
ce29c690-001c-46c5-ab5d-21aaf8754819
சமூக ஊடகத்தில் வலம் வரும் காணொளியில், பேருந்துப் படிக்கட்டுகளில் நின்றுகொண்டிருக்கும் ஆடவர், இரண்டு பெண் பாதுகாவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தெரிகிறது. - காணொளிப் படம்: திரெட்ஸ் சமூக ஊடகம்

சிங்கப்பூருக்குக் கல்விப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, இங்குள்ள பாதுகாவல் அதிகாரிகளை ஹாங்காங் உயர்நிலைப்பள்ளி முதல்வர் ஒருவர் வசைபாடுவதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவியதை அடுத்து, ஹாங்காங் கல்வித்துறை அதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சமூக ஊடகத்தில் சனிக்கிழமை (மே 23) பதிவிடப்பட்ட அக்காணொளியில், பேருந்துப் படிக்கட்டுகளில் நின்றுகொண்டிருக்கும் ஆடவர் ஒருவர், சாஃப்ரா பாதுகாப்புச் சீருடை அணிந்திருக்கும் இரண்டு பெண் பாதுகாவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தெரிகிறது.

அக்காணொளியில், அந்தப் பேருந்தைச் சற்றுப் பின்னோக்கி நகர்த்துமாறு பாதுகாவலர்கள் கூறினர். கோபமடைந்த அந்த ஆடவர், அவர்களை “வாயை மூடுங்கள்!” எனத் திட்டினார்.

அதனைத் தொடர்ந்து, பாதுகாவலர்களிடம் காண்டோனீஸ் (Cantonese) மொழியில் சில விமர்சனங்களை முன்வைத்த அவர், முகத்தைச் சுளித்துக் கேலி செய்ததுடன், முடிந்தால் பேருந்திற்குள் ஏறுமாறு அவர்களுக்குச் சவால் விடுத்தார்.

அந்த ஆடவருக்குப் பின்னால் நின்ற பெண் ஒருவர், நிலைமையைச் சீராக்க அந்த ஆடவரைப் பின்னோக்கி இழுக்க முயன்றார். எனினும், ஆத்திரமடைந்த ஆடவர், அந்தப் பெண்ணையும் தமது வழியிலிருந்து விலகும்படி சத்தமிட்டு விரட்டினார்.

பொருளியல், தொழில்நுட்பம் சார்ந்த கல்விப் பயணத்திற்காக அந்தப் பள்ளியின் ஆசிரியர்களும் ஏறக்குறைய 35 மாணவர்களும் மே 20 முதல் 24 வரை சிங்கப்பூருக்கு வந்திருந்ததாக ஹாங்காங்கின் எச்கே01 செய்தி நிறுவனம் தெரிவித்தது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில், ஜூராங்கில் உள்ள மேற்கத்திய உணவகம் ஒன்றுக்கு அவர்கள் சென்றிருந்ததாக ஹாங்காங் கல்விச் செய்தித் தளமான ‘எடு லான்செட்’ தெரிவித்தது. அவர்கள் அங்கு இறங்குவதற்காக, இரட்டை மஞ்சள் கோடு பகுதியில் பேருந்து நிறுத்தப்பட்டபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.

இந்த விவகாரம் குறித்துத் தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பாக விரிவான எழுத்துபூர்வ விளக்கத்தை அளிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளியைக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் ஹாங்காங் கல்வித்துறை ஞாயிற்றுக்கிழமை எச்கே01 ஊடகத்திடம் கூறியது.

குறிப்புச் சொற்கள்