இணையவழி பொய்ச் செய்தி, சூழ்ச்சித்திறத்திற்கு எதிரான பாதுகாப்புச் சட்ட (பொஃப்மா) உத்தரவுக்கு இணங்கத் தவறிய குற்றச்சாட்டு தொடர்பாக சமூக ஆர்வலர் கோகிலா அண்ணாமலை, 38, மீதான விசாரணை புதன்கிழமை (அக்டோபர் 7) தொடங்கியது.
போதைப்பொருள் கடத்தியதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் தொடர்பாக, 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமது ஃபேஸ்புக், எக்ஸ் சமூக ஊடகத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.
அதில், சட்ட நடைமுறைகளைப் பொருட்படுத்தாமல் அரசாங்கம் மரண தண்டனையைச் செயல்படுத்துகிறது என்றும், போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றத்தை மெய்ப்பிக்கும் சட்டபூர்வ பொறுப்பு அரசிடம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, உள்துறை, சட்ட அமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில் பொஃப்மா அலுவலகம் அவருக்குத் திருத்த உத்தரவைப் பிறப்பித்தது. அந்த உத்தரவை அவர் நிறைவேற்றவில்லை என்று 2026 ஏப்ரலில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் முதல் நாளில், கோகிலா வெளியிட்ட “நான் மறுக்கிறேன்” எனும் தலைப்பிலான பதிவின் ஒரு பகுதி நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.
“இது சட்டப்படியான உத்தரவை தெரிந்தே மீறிய தெளிவான வழக்கு. உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வழி இருந்தும், அவர் வேண்டுமென்றே அதனைப் புறக்கணித்தார். இந்த வழக்கை அவர் தன் விளம்பரத்திற்காகப் பயன்படுத்த முயல்கிறார்,” என்று அரசாங்க வழக்கறிஞர் தரப்பு குறிப்பிட்டது.
“உண்மையான தகவல்களுக்கோ கருத்துகளுக்கோ பொஃப்மா பொருந்தாது. அரசாங்கம் தன் பதிலை அளிக்கலாமே தவிர, ஒருவரின் சொந்த சமூக ஊடகப் பக்கத்தில் 330 சொற்கள் கொண்ட கட்டுரையைப் பதிவிடும்படி பணிக்க முடியாது. எனவே, இந்தத் திருத்த உத்தரவு செல்லாது,” என்று கோகிலாவின் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
அக்டோபர் 10 முதல் நவம்பர் 7 வரை சென்னைக்குச் செல்ல கோகிலா அனுமதி கோரினார். கூடுதல் $5,000 பிணைத் தொகையுடன் அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
சிங்கப்பூரில் மரண தண்டனையை ஒழிப்பதற்கான கூட்டத்தில் பங்கேற்றது தொடர்பான மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு விசாரணை தொடர்கிறது.
