லிட்டில் புரொஃபெசர்ஸ் கற்றல் நிலையம்மீது விசாரணை

ஊழியர்களுக்குச் சம்பளம் தரவில்லை எனக் குற்றச்சாட்டு

லிட்டில் புரொஃபெசர்ஸ் கற்றல் நிலையம்மீது விசாரணை

2 mins read
57fbcd73-17bf-4171-ad5e-94ebdb1a62dc
ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 81, புளோக் 835ல் அமைந்துள்ள லிட்டில் புரொஃபெசர்ஸ் கற்றல் நிலையம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மாணவர் பராமரிப்புச் சேவைகளை வழங்கும் ‘லிட்டில் புரொஃபெசர்ஸ் கற்றல் நிலையம்’ எனும் நிறுவனம் சம்பளம் தரவில்லை என்று 54 ஊழியர்கள் புகார் கூறியுள்ளனர். மனிதவள அமைச்சு அதனை வேலை நியமனச் சட்டத்தின்கீழ் விசாரித்து வருகிறது.

இங்குள்ள குறைந்தது எட்டுத் தொடக்கப்பள்ளிகளில் மாணவர் பராமரிப்பு நிலையங்களை அது நடத்துகிறது. நிறுவனம், ஜனவரி மாத ஊதியத்தைக் கொடுக்கவில்லை என்று ஊழியர்கள் குற்றஞ்சாட்டினர். சென்ற ஆண்டு (2025) நவம்பர் மாதத்திலிருந்து மத்திய சேம நிதியில் நிறுவனம் செலுத்தவேண்டிய தொகையையும் போடவில்லை என்று ஊழியர்கள் கூறினர்.

மனிதவள அமைச்சு, சர்ச்சை நிர்வாகத்திற்கான முத்தரப்புக் கூட்டணி, மத்திய சேம நிதிக் கழகம் ஆகியவை அதன் தொடர்பில் சனிக்கிழமை (பிப்ரவரி 14) இரவு கூட்டறிக்கையொன்றை வெளியிட்டன. முத்தரப்புக் கூட்டணியிடம் ஊழியர்கள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புகார் கூறியிருந்தனர்.

போன ஆண்டு (2025) டிசம்பர் மாதம், மத்திய சேம நிதிக் கணக்கில் நிறுவனம் அதன் பங்கைப் போடவில்லை என்று 19 ஊழியர்கள் கழகத்திடம் புகார் அளித்திருந்தனர். லிட்டில் புரொஃபெசர்ஸ் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் கழகம் வழக்குத் தொடுத்துள்ளது.

ஒப்பந்த மீறல்களின் தொடர்பில் எட்டுப் பள்ளிகளுக்கு அந்நிறுவனம் வழங்கிவந்த சேவைகளை ரத்துச் செய்திருப்பதாகக் கல்வி அமைச்சு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.

ஒயிட் செண்ட்ஸ் தொடக்கப்பள்ளியிலும் ஹொங் வென் பள்ளியிலும் மாணவர் பராமரிப்புச் சேவைகளை வழங்கிவந்தது லிட்டில் புரொஃபெசர்ஸ்.

ஆறு தொடக்கப்பள்ளிகளில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் பாலர்பள்ளிகளிலும் அது முழு நாள் பராமரிப்புச் சேவைகளை வழங்கியது. கிராஞ்சி, ஏங்கர் கிரீன், வாட்டர்வே, பொங்கோல் கோவ், ஜிங் ‌ஷான், வெஸ்ட்வுட் ஆகியவையே அவை.

இந்நிலையில், பிப்ரவரியில் மாணவர் பராமரிப்புக் கட்டணத்திற்காக நிறுவனம் இரண்டு முறை வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைக் கழித்திருப்பதும் பெற்றோர் சிலருக்குத் தெரியவந்தது. அதுகுறித்தும் அமைச்சு, காவல்துறையிடம் புகார் கூறியுள்ளது.

புகார்கள் கொடுக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்த காவல்துறை, விசாரணை நடைபெறுவதாகக் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்