போலிஸ் அனுமதியின்றி பொது இடத்தில் கூட்டத்தைக் கூட்டியதற்காக இந்திய நாட்டவர் ஒருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலிஸ் நேற்று முன்தினம் தெரிவித்தது.
அந்த 32 வயது ஆடவர், மரினா பேயில் இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக போலிஸ் தெரிவித்தது.
இந்திய அரசால் புதிதாக அமல்படுத்தப்பட்டிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வாசகங்களுடனான பதாகையை ஏந்தியவாறு உள்ள தனது புகைப்படத்தை தனது சமூக இணையத் தளத்தில் அந்த ஆடவர் பதிவேற்றம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்திய அரசின் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யவே அவர் அங்கு கூட்டத்தைக் கூட்டியதாகக் கூறப்படுகிறது.
அந்த ஆடவர் நிரந்தரவாசியா அல்லது வேலைநியமன ஒப்பந்தத்தில் இங்கு தங்கியுள்ளாரா என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை.
மரினா பேயில் கூட்டம் கூட்டிய சம்பவம் தொடர்பாக மேலும் சிலர் விசாரிக்கப்படலாம் என்று தெரிகிறது.
பொது இடத்தில் போலிஸ் அனுமதியின்றி கூட்டத்தைக் கூட்டுவதோ பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதோ சட்ட விரோதம் என்று போலிஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
வெளிநாடுகளின் அரசியல் தொடர்பாக சிங்கப்பூரில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கோ கூட்டம் கூட்டுவதற்கோ போலிஸ் எவ்வித அனுமதியும் அளிக்காது.
சிங்கப்பூரில் வசிக்கும் அல்லது சுற்றுலாப் பயணிகளாக வருகை தரும் வெளிநாட்டினர் சிங்கப்பூரின் சட்டங்களை மதித்து நடந்துகொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் போலிஸ் கேட்டுக்கொண்டது.
இந்தியாவில் புதிய குடியுரிமை திருத்த சட்ட மசோதா அமல்படுத்தப்பட்டது. அதைக் கண்டித்து அங்கு நாடு முழுதும் 25 நகரங்களில் எதிர்க்கட்சியினரும் சிறுபான்மையினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவின் மதச்சார்பற்ற கொள்கைக்கு இந்தப் புதிய சட்டம் ஓர் அச்சுறுத்தல் என்று சிலர் வாதாடி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்ளாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம்கள் அல்லாத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்க இந்தப் புதிய சட்டம் வழி வகுக்கும்.