சிங்கப்பூரின் முக்கியப் பசுமைத் திட்டமான ‘ஒன்மில்லியன்டிரீஸ்’ திட்டத்தின்கீழ் மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கை வனப் பகுதியில் நடப்பட்டிருந்த மரக்கன்றுகள் மற்றும் புதர்களை, உரிய அனுமதியின்றி அழித்த ஒப்பந்ததாரர் மீது தேசியப் பூங்காக் கழகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
பத்து ஆண்டுகளில் சிங்கப்பூரெங்கும் ஒரு மில்லியன் மரங்களை நடுவதே 2020ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த ‘ஒன்மில்லியன்டிரீஸ்’ திட்டத்தின் இலக்காகும்.
இந்நிலையில், லோவர் பியர்ஸ் நீர்த்தேக்கப் பூங்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) காலையில் தேசியப் பூங்காக் கழக அதிகாரி ஒருவர் அவ்விடத்தை ஆய்வு செய்தபோது, அங்கு மரக்கன்றுகள் நடப்பட்டிருந்த இடத்தில் பாதியளவு நிலத்தை ஒப்பந்ததாரர் ஒருவர் தமது கட்டுமானப் பொருள்களைத் தற்காலிகமாக வைப்பதற்காக அனுமதியின்றிச் சீரமைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இப்பகுதி பொருள்களைச் சேமித்து வைக்க உகந்தது அல்ல என்றும் மாற்று இடத்தைப் பயன்படுத்துமாறும் முன்னரே பலமுறை பூங்காக் கழகத்தால் அறிவுறுத்தப்பட்டிருந்தும், ஒப்பந்ததாரரின் தள மேற்பார்வையாளர் அதற்குப் புறம்பாகச் செயல்பட்டு மே 29ஆம் தேதியன்று அத்துமீறி இப்பகுதியை அழித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெரிந்தவுடன் தேசிய பூங்காக் கழகம் உடனடியாக வேலையை நிறுத்த உத்தரவிட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த பொருள்களையும் அப்புறப்படுத்தச் செய்தது. தேசியப் பூங்காக்கள் அல்லது இயற்கைப் வனப் பகுதிகளில் அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்கள் அல்லது அகற்றுபவர்களுக்கு $50,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பதால், தவறிழைத்த தரப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கழகத்தின் பாதுகாப்புப் பிரிவு குழும இயக்குநர் லிம் லியாங் ஜிம் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் அருகிவரும் உயிரினங்களில் ஒன்றான ‘ராஃபிள்ஸ் பேண்டட் லங்கூர்’ குரங்கு வகையைப் பாதுகாக்கும் நோக்குடன் சம்பந்தப்பட்ட இயற்கை வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அவ்வகை குரங்குகளுக்கு உணவு வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், ஓல்டு அப்பர் தாம்சன் சாலை அருகில் உள்ள இயற்கை வனப்பகுதியில் இருந்த மரக்கன்றுகள் அழிக்கப்பட்டு அகற்றப்பட்டது உள்ளூர் இயற்கை ஆர்வாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

