சிங்கப்பூரின் தேசிய விமான நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), ஏர் இந்தியாவில் செய்யப்பட்டுள்ள முதலீட்டை நியாயப்படுத்தியிருக்கிறது.
அந்த முதலீட்டால் பல வளர்ச்சி வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக எஸ்ஐஏ குறிப்பிட்டது.
இந்தியாவின் விமானப் போக்குவரத்துச் சந்தையில் நேரடியாகப் பங்கு வைத்துள்ள ஒரே வெளிநாட்டு விமான நிறுவனம் எஸ்ஐஏ.
கடந்த 2024 நவம்பரில், அதன் முன்னாள் கூட்டு நிறுவனமான விஸ்தாரா, ஏர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, விரிவுப்டுத்தப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தில் எஸ்ஐஏவுக்கு 25.1 விழுக்காடு பங்கு உள்ளது.
“ஏர் இந்தியா முதலீட்டின் மூலமாக இந்தியாவின் உள்நாட்டுச் சந்தையிலும், இந்திய விமான நிலையங்கள் வழியாகச் செல்லும் அனைத்துலக வழித்தடங்களிலும் எங்களால் நேரடியாகக் கால்பதிக்க முடிகிறது. இது சிங்கப்பூர் விமான நிலையத்திற்குப் பக்கபலமாக இருப்பதோடு, ஒரே ஒரு நிலையத்தை மட்டுமே நம்பியிருக்கும் வணிக உத்தியால் பெற முடியாத புதிய வளர்ச்சி வாய்ப்புகளுக்கும் வழிவகுக்கிறது,” என்று எஸ்ஐஏ கூறியது.
ஜூலை 24ஆம் தேதி நடைபெறவுள்ள வருடாந்தர பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக, சிங்கப்பூர் பங்கு முதலீட்டாளர் சங்கத்தின் (சியாஸ்) கேள்விகளுக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 17) எஸ்ஐஏ நிர்வாகம் இவ்வாறு பதிலளித்தது.
ஏர் இந்தியாவின் முன்னேற்றத்தில் எஸ்ஐஏவுக்கு எத்தகைய பங்கு இருக்கும் என்பதை விளக்க வேண்டும் என்று சியாஸ் கேட்டுக்கொண்டது.
மேலும், எஸ்ஐஏ இதற்கு முன்பு முதலீடு செய்திருந்த ஏர் நியூசிலாந்து, வெர்ஜின் அட்லான்டிக், வெர்ஜின் ஆஸ்திரேலியா ஆகிய நிறுவனங்களின் முதலீடுகளிலிருந்து, இந்த ஏர் இந்தியா முதலீடு உத்தி எவ்வாறு வேறுபடுகிறது என்றும் அது விளக்கம் கேட்டிருந்தது.
அதற்குப் பதிலளித்த எஸ்ஐஏ, ஏர் இந்தியா நிறுவனம் இன்னும் பல சவால்களை எதிர்கொண்டு வருவதை ஒப்புக்கொண்டது.
அதிக எரிபொருள் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், இந்திய விமானங்களுக்குப் பாகிஸ்தான் வான்வெளி மூடல், 2025 ஜூன் மாதத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து உள்ளிட்டவை சவால்களில் அடங்கும்.
இருப்பினும், தனது முதலீட்டை தற்காத்துப் பேசிய எஸ்ஐஏ குழுமம், வாடிக்கையாளர்களின் அனுபவம், புதிய விமானங்கள், வழித்தடங்களின் விரிவாக்கம், தரைவழி மற்றும் விமானப் பயணத்தின்போது வழங்கப்படும் சேவைகள், செயல்பாட்டுத் திறன் என அனைத்திலும் ஏர் இந்தியா நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகக் குறிப்பிட்டது.
இத்தகைய முயற்சிகளால் வாடிக்கையாளர்களின் மனநிறைவுக் குறியீடான ‘நெட் புரோமோட்டர் ஸ்கோர்’ கணிசமாக உயர்ந்துள்ளதோடு, ஏர் இந்தியா நிறுவனம் சில தொழில்துறை விருதுகளையும் பெற்றுள்ளதாக எஸ்ஐஏ மேலும் தெரிவித்தது.

