96 முதலீட்டாளர்களிடமிருந்து கிட்டத்தட்ட $15 மில்லியன் திரட்டி, முதலீட்டு மோசடிகளில் பலமுறை ஈடுபட்ட ஆடவருக்கு 11 ஆண்டுகள், மூன்று மாதச் சிறைத் தண்டனை வியாழக்கிழமை (மார்ச் 9) விதிக்கப்பட்டது.
2013ஆம் ஆண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடைபட்ட காலத்தில் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்பட்டது.
38 வயது பே வே சியாங்மீது சுமத்தப்பட்டிருந்த பத்து குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புகொண்டார். அவற்றில், மோசடிக் குற்றச்சாட்டுகளும் அடங்கும்.
அவரால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிட்டத்தட்ட $6 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.
இந்த வழக்குடன் தொடர்புடைய நிறுவனங்களில், ‘பிரைவ் இன்வெஸ்ட்மென்ட்’, ‘ஜாபெல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்’, பிக்சல்டிரேட் குழும நிறுவனங்கள் ஆகியவை அடங்கும் எனக் கூறப்பட்டது.
பேவுக்குத் தொடர்புடைய சில குற்ற வழக்குகளில் மார்க் செங் ஜின் குவான், லோ ஜி சியாங் ஆகிய இரு ஆடவர்களுக்கும் தொடர்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
செங்கிற்கு 2022ஆம் ஆண்டு, 17 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவரின் வயது 34.
அதே நேரத்தில், லோவிற்கு 2021ஆம் ஆண்டு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவரின் வயது 31.

