முதலீட்டு மோசடி: ஏமாற்றிய ஆடவருக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை

முதலீட்டு மோசடி: ஏமாற்றிய ஆடவருக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை

2 mins read
16f053e1-aeb9-4d7c-b77b-be3573bed1a3
குற்றவாளியான லீ சீ தியோங், 57 வயது ஆடவர் ஒருவரை இல்லாத ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யவைத்து ஏமாற்றினார். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஆடவர் ஒருவர், கடந்த 2022ஆம் ஆண்டு சிறையில் இருந்தபோது அறிமுகமான சக கைதி ஒருவரை, அவர் விடுதலையான பிறகு முதலீட்டு மோசடிமூலம் ஏமாற்றினார்.

ஏமாற்றிய குற்றத்தை ஒப்புக்கொண்ட லீ சீ தியோங், 45, என்ற அந்த ஆடவருக்குத் திங்கட்கிழமை (மார்ச் 9) ஈராண்டுகள் ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

லீ, சக கைதியான 57 வயது நபரை, இல்லாத ஒரு நிறுவனத்தில் $89,000 முதலீடு செய்யவைத்து ஏமாற்றினார்.

சிறையிலிருந்து விடுதலையான பிறகு, பாதிக்கப்பட்ட நபர் லீயின் பொட்டல விநியோகத் தொழிலில் பணிபுரிந்தார்.

அங்கு இரண்டு மாதங்கள் பணிபுரிந்த பிறகு, பாதிக்கப்பட்டவர் மற்றொரு வேலையில் சேர்ந்தார்.

கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், தொழிலில் பேரிழப்பைச் சந்தித்த லீயால் தமது ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கமுடியாமல் போனது. அதனால், அந்த முன்னாள் சக கைதியிடம் பணத்தைப் பெற்று ஊழியர்களுக்குச் சம்பளத்தைக் கொடுக்க அவர் திட்டம் தீட்டினார்.

‘லிமொசீன்’ டாக்சி தொழிலில் முதலீடு செய்ய விருப்பமா என்று லீ, பாதிக்கப்பட்டவரிடம் கேட்டார்.

தொழில் தொடங்குவதற்குத் தம்மிடம் போதிய பணம் இல்லை என்று கூறி, அதனால்தான் பாதிக்கப்பட்டவரின் ஒத்துழைப்பை நாடுவதாக லீ அவரிடம் சொன்னார்.

அது உண்மையான தொழில் என்று நம்பவைக்க, டெலிகிராம் விளம்பரங்களிலிருந்து லீ பொய்யான தகவல்களைப் பெற்று பாதிக்கப்பட்டவரிடம் காட்டினார். அவற்றில், வாகனங்களை வாடகைக்கு எடுப்பதற்கான செலவு, ஓட்டுநர்களின் சம்பளங்கள், தொழில்மூலம் கிடைக்கக்கூடிய முன்னுரைக்கப்பட்ட வருவாய் போன்ற விவரங்கள் அடங்கின.

அந்தத் தொழிலுக்கு வாரந்தோறும் மூலப் பணம் செலுத்தவேண்டும் என்று லீ கூறினார். அதைத் தொடர்ந்து, முதலீட்டில் சேர்ந்துகொள்ள பாதிக்கப்பட்டவர் ஒப்புக்கொண்டார்.

லீயின் அறிவுரையைக் கேட்டு, அவர் ஏழு முறை ‘பேநவ்’ செயலியைப் பயன்படுத்தி, இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் $89,000 செலுத்தினார்.

பின்னர், சேரவேண்டிய லாபம் கிடைக்காததால் 2024ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி பாதிக்கப்பட்டவர் பணம் செலுத்துவதை நிறுத்திக்கொண்டார்.

2025ஆம் ஆண்டு பிப்ரவரியில், லீ உண்மையை ஒப்புக்கொண்டு, டாக்சி தொழில் என ஒன்று கிடையாது என்று பாதிக்கப்பட்டவரிடம் கூறினார்.

அதே ஆண்டு மே 27ஆம் தேதி லீ கைதுசெய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்
மோசடிமுதலீடுசிறை