ஹாங்காங் பங்குச்சந்தையில் இடம்பெறும் நிறுவனம் ஒன்றில் 650,000 வெள்ளித் தொகையை முதலீடு செய்த சிங்கப்பூரைச் சேர்ந்த தம்பதி 500,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையைப் பறிகொடுத்துள்ளனர்.
அந்நிறுவனத்தின் மதிப்பு வெகு விரைவில் சரிந்ததைத் தொடர்ந்து அவர்கள் இந்நிலைக்கு ஆளாயினர். ‘பம்ப் அண்ட் டம்ப்’ என்றழைக்கப்படும் ஒருவகை மோசடியில் அவர்கள் சிக்கியதாக நம்பப்படுகிறது.
‘பம்ப் அண்ட் டம்ப்’ மோசடியில் மோசடிக்காரர்கள் தவறான கண்ணோட்டத்தைத் தரும் அல்லது போலியான தகவல்களைக் கொண்டு குறிப்பிட்ட சில பங்குகளை விளம்பரப்படுத்துவர். அதன் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குச் சந்தையில் அதிக வரவேற்பு இருப்பது போன்ற உணர்வை அவர்கள் ஏற்படுத்துவர்.
அடுத்தகட்டமாக மோசடிக்காரர்கள் பங்குகளை உயர்ந்த விலையில் விற்பர். அதனால் அந்நிறுவனத்தின் பங்குகள் வேகமாகச் சரியும். அதையடுத்து முதலீட்டாளர்கள் அதிக இழப்பை எதிர்கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தம்பதி கடந்த ஆகஸ்ட் மாதம் காவல்துறையிடம் புகாரளித்தனர். இதுகுறித்து தாங்கள் விசாரணை நடத்திவருவதாகக் காவல்துறை, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள நிறுவனமான சிஎம்பிசி கேப்பிட்டல் ஹோல்டிங்ஸ், முதலீட்டு மோசடிகளின் தோடர்பில் தங்களின் பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடும் என்று அதன் இணையத்தளத்திலும் ஹாங்காங் பங்குச்சந்தை இணையத்தளத்திலும் ஆகஸ்ட் 25ஆம் தேதி அறிக்கை வெளியிட்டுத் தெரிவித்தது.
இதுகுறித்து ஹாங்காங் காவல்துறையிடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் தாங்கள் தெரிவித்திருப்பதாக அந்நிறுவனம் குறிப்பிட்டது.


