கல்விக் கொள்கை குறித்து கருத்துரைக்க சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு

கல்விக் கொள்கை குறித்து கருத்துரைக்க சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு

2 mins read
முழுமையான கல்வித் திறனை பிள்ளைகள் பெருவதற்கான முயற்சி: அமைச்சர்
c570d5e0-5dd8-4f51-8702-9b0bb1ea8aec
சிங்கப்பூர் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடந்த ஒரு நிகழ்வில் சிறப்புரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2
சிங்கப்பூர் கல்வி அமைச்சின்  சின்னம்.
சிங்கப்பூர் கல்வி அமைச்சின் சின்னம். - படம்: சிங்கப்பூர் கல்வி அமைச்சு

மாணவர்களுக்கான கல்வி கற்பிப்பு முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக, பொதுமக்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெறச் சிங்கப்பூர் கல்வி அமைச்சு (MOE) இவ்வாண்டு ஏப்ரல் முதல் தொடர் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்யத் தொடங்கியது.

அதன் அங்கமாக கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தலைமையில் முதன்முறையாகப் பொதுமக்கள் நேரடியாகக் கலந்துகொள்ளும் கலந்துரையாடல் நிகழ்வு, ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

கல்வித் துறையில் நிலவும் தேவையற்ற போட்டித் தன்மையைக் குறைக்கும் நோக்கத்துடன் பொதுமக்களிடம் ஆலோசனைகள் பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இதற்கு முன்னதாக ஜனவரி மாதத்தில் கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார்.

உயர்நிலைப் பள்ளிகளில் சேர்வதற்கான முன்னோடித் தேர்வான தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் நடத்தப்படும் பிஎஸ்எல்இ தேர்வின் அவசியத்தைக் குறைத்தல், மாணவர் நேரடிச் சேர்க்கைக்கான திட்டத்தை (டிஎஸ்ஏ) மறுஆய்வு செய்தல் ஆகிய முக்கிய அம்சங்கள் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும்.

மாணவர்களின் நற்பண்புகள், வாழ்க்கைத் திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்துதல் குறித்தும் பொதுமக்களிடம் கருத்துகள் வரவேற்கப்படும். சிங்கப்பூர் குடியுரிமை பற்றிய பாடங்களும் வகுப்பறையைக் கடந்து நடத்தப்படும் துணைப்பாடத் திறன்களும் வெளிப்புற நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்படும்.

கலந்துரையாடல்களில் பங்கேற்க விரும்புவோர் கல்வி அமைச்சின் இணையப் பக்கத்தில் பதிவு செய்துகொள்ளலாம். பொது நிகழ்வில் கலந்துகொள்ள இயலாதவர்கள், அவர்களின் கருத்துகளைத் தமிழ் உள்ளிட்ட அவரவர் தாய்மொழிகளில் கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்தது.

பொதுமக்கள் உடனான இந்த கலந்துரையாடல்கள் இவ்வாண்டு முதல் 2027ஆம் ஆண்டுவரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

“எதிர்காலத்தில், நாம் கடந்துவந்ததை விட மாறுபட்ட உலகத்தை நம் பிள்ளைகள் எதிர்கொள்வர். எனவே, கல்வியைப் போட்டியாக எண்ணாமல், கல்வித் தேர்ச்சியை மட்டுமே நோக்கிய ஒருமுக இலக்கிலிருந்து விலகி, முழுமையான கல்வித் திறனை பிள்ளைகள் பெறுவதற்கு நாம் அதிகம் செய்ய வேண்டும்,” என்று இதுபற்றி கருத்துரைத்த கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார்.

பொதுமக்களின் எண்ணங்களை ஒருங்கிணைக்கும் முயற்சி

இக் கலந்துரையாடல்கள், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள செயல்பாடுகளுக்கு மெருகேற்றுவதோடு, மாறிவரும் உலகில் நம் பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வித் திட்டத்தைக் கட்டமைக்க ஆழமான விருப்பமுடைய பொதுமக்களை ஒருங்கிணைக்கும் கல்வி அமைச்சின் முயற்சியாகும். எனவே திறந்த மனத்துடன், பொதுமக்கள் வழங்கும் பற்பல கருத்துகளையும் கவனமாகக் கேட்டறிய விரும்புவதாக அமைச்சர் லீ விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்