மாறிவரும் பணிகளைத் தடையின்றித் தொடர, நூலக அதிகாரி சலீமா முகமது ஹுசேன், கடந்த ஆண்டு ‘செயற்கை நுண்ணறிவு மூலம் உற்பத்தித்திறனை அதிகரித்தல்’ (AI Boosting Productivity) எனும் ஒருநாள் பயிற்சியில் பங்கேற்றார்.
இது தவிர, திட்ட நிர்வாகம், சுருக்கமாக எழுதுவது எப்படி போன்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.
இதன் விளைவாக அவரால் தமது பணிகளை முன்பைவிட மிக வேகமாகவும் துல்லியமாகவும் செய்ய முடிகிறது.
தொழில்நுட்ப மாற்றங்கள் வேகமாக நிகழ்ந்து வரும் தற்போதைய சூழலில், திறனை மேம்படுத்திக்கொள்ள இவரைப் போன்ற பொதுத்துறை அதிகாரிகளுக்கு ஊக்கமளிப்பதோடு, கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படுகின்றன.
நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 26ல் நடந்த நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது பேசிய பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் சான் சுன் சிங், பொது அதிகாரிகளுக்காகத் தொடங்கப்பட்ட ‘நிர்வாகத் தகுதி இயக்கம்’ (Career Fitness Movement) மூலம் இதுவரை 69 பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த 4,300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பயனடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
அவ்வாறு பயன்பெற்றவர்களில் 60 வயது மதிக்கத்தக்க சலீமாவும் ஒருவர்.
முனைப்பு தந்த உவப்பு
தேசிய நூலக வாரியத்தில் கடந்த 30 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் சலீமா, காலத்திற்கு ஏற்ற திறன்களைக் கற்பதைப் பழக்கமாகக் கொண்டவர்.
இரவல் வழங்கப்படும் நூல்களுக்குக் கைப்பட முத்திரை பதித்த காலத்தில் பணியாற்றிய அவர், தற்போதைய பணிக்குச் செயற்கை நுண்ணறிவு தேவைப்படுகிறது என்றார்.
தொடர்புடைய செய்திகள்
வாரியத்தின் வள நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றும் சலீமா, நூலகத்திற்கு வரும் புத்தகங்களைப் பதிவுசெய்வது, பொதுமக்களின் புத்தக நன்கொடைகளை நிர்வகிப்பது உள்ளிட்டவற்றில் ஈடுபடுகிறார்.
திறன் மேம்பாட்டுக்காகக் கடந்த ஆண்டு நேரம் ஒதுக்கி, அதற்கான கற்றலில் சளைக்காமல் ஈடுபட்டதன் பலனாக அவருக்குக் கூடுதல் பொறுப்பும் பதவி உயர்வும் தரப்பட்டுள்ளது.
தனிநபருக்கும் வேலையிடத்திற்கும் இடையிலான கூட்டு முயற்சி
கூட்டு முயற்சியே வெற்றியின் ரகசியம். திறன் மேம்பாடு என்பது தனிநபரை மட்டும் சார்ந்ததன்று. அது ஒரு கூட்டு முயற்சி என்பதை சலீமாவின் அனுபவம் உணர்த்துகிறது.
“எனது மேலதிகாரிகள், வாழ்க்கைத்தொழில் ஆலோசகர் (Career Coach) ஆகியோரின் ஊக்கம்தான் இவ்வளவு மாற்றங்களை ஏற்கக் காரணம்,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.
இது குறித்து தேசிய நூலக வாரியத்தின் மனிதவளப் பிரிவு அதிகாரி கூறுகையில், “பணியாளரின் முன்னேற்றத்திற்குரிய திறனை வளர்ப்பதில் அவரோடு, மேலதிகாரிகளும் நிறுவனமும் இணைந்து செயல்படுவது அவசியம் என்பதை இது காட்டுகிறது,” என்றார்.
செயற்கை நுண்ணறிவு என்பது அனைவரும் வரவேற்க வேண்டிய அம்சம். புதிய மாற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தகவமைத்துக் கொண்டால், எந்தத் துறையிலும் தொடர்ந்து நிலைத்து நிற்க முடியும் என்று சலீமா மற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்துகிறார்.

