மனநலம், நீடித்த நிலைத்தன்மை, சமூக ஈடுபாடு, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் போன்ற சவால்களைக் கையாளும் இந்திய இளையர்களுக்கு ஒட்டுமொத்த சமூகத்தின் ஈடுபாடு தேவை என்று கல்வி, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.
மக்கள் கழக நற்பணிப் பேரவை ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) நடைபெற்ற ‘நற்பணி@எஸ்ஜி60’ கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட நற்பணிப் பேரவையின் ஆலோசகருமான அவர், தமிழ் முரசிடம் பேசினார்.
நற்பணிப் பேரவை சமூகப் பங்காளிகளுடனும் பங்குதாரர்களுடனும் இணைந்து, இந்திய இளையர்கள் சந்திக்கும் சவால்களைச் சமாளிக்க உதவும் என டாக்டர் ஜனில் உறுதியளித்தார்.
இவ்வாண்டு முதல்முறையாக இந்த நிகழ்ச்சி குடியிருப்புப் பேட்டையில் அடியெடுத்து வைக்கும் விதமாக காத்திப் பன்முக விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.
டாக்டர் ஜனிலுடன் பொதுமக்களைச் சந்தித்து கொண்டாட்ட உணர்வில் திளைத்தார் நீ சூன் குழுத்தொகுதி அடித்தள ஆலோசகர் லீ ஹுவே யிங்.
நிகழ்ச்சியில் பல இனங்கள், கலாசாரங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டதையும் திருவாட்டி லீ பாரட்டினார்.
‘ஒன்றாக ஒன்றிணைந்து’ என்ற கருப்பொருளில் நடந்தேறிய கொண்டாட்டத்தில் கிட்டத்தட்ட 2,000 பேர் பங்கேற்றனர்.
18 குழுத்தொகுதிகள், 12 பங்காளித்துவ அமைப்புகள் இணைந்து விளையாட்டு, உணவு, பானங்கள், நடவடிக்கைகள்வழி மக்களை உற்சாகப்படுத்தின.
தொடர்புடைய செய்திகள்
உணர்வுகளைத் தூண்டும் நடவடிக்கைகள் தவிர இவ்வாண்டு கொண்டாட்டங்களில் இளையர்களுக்கு தனித்துவமான ஒரு ‘யூத்ஃபோரியா’ ஒய்விடமும் எழுப்பப்பட்டது.
இளையர்கள் குளிர்ந்த கோலிசோடா பானத்தை அருந்தியவாறே மனநலம், நீடித்த நிலைத்தன்மை, சமூக ஈடுபாடு போன்ற முக்கியப் படைப்புகளை பற்றி அறிந்துகொள்ள இந்த ஓய்விடம் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.
“இந்த முன்முயற்சி இளையர்கள் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும் உதவ ஒரு பாதுகாப்பான இடமாக அமையும்,” என்று நற்பணிப் பேரவை இளையர் அமைப்பின் தலைவர் காந்தேஸ்வரி குமார், 34, கூறினார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சட்டம், போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை, சிங்கப்பூரின் 60 ஆண்டு பயணத்தில் இந்தியச் சமூகத்தின் பங்கைச் சுட்டிக்காட்டினார்.
“அடுத்த 60 ஆண்டுகளில் இன்னும் சிக்கலான சவால்களை நாம் சந்திக்க நேரிடும். இருப்பினும், இதுபோன்ற நிகழ்வுகளில் தென்படும் ஒற்றுமையுடன், நாம் அவற்றைச் சிறப்பாகச் சமாளிப்போம் என்பது உறுதி,” என்றார் அவர்.
சமூகத்தில் நற்பணிப் பேரவையின் தனித்துவமான நிலைப்பாடும் கூடுதல் நன்மை என்று அவர் கூறினார்.
“நற்பணி போன்ற இதர இந்திய அமைப்புகள் பல குடும்பங்கள், இளையர்களை எளிதில் நாடி அவர்களுக்கு உதவ முற்படுகின்றன,” என்றார் அவர்.
நிகழ்ச்சியின் ஒரு முக்கியப் பகுதியாக, தீபாவளியை முன்னிட்டு நீ சூன் தொகுதியில் வசதிகுறைந்த 175 குடும்பங்களுக்கு அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன.
சுகாதார அமைச்சுடன் இணைந்து செயல்படும் இந்த முயற்சி கடந்த ஐந்தாண்டுகளாக நடந்தேறி வருகிறது என்றார் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் நிரஞ்சனா துரைராஜ்.
இந்த முயற்சி அடுத்த மூன்று வாரங்களுக்கு இதர குடியிருப்புப் பேட்டைகளில் தீபாவளி தினம்வரை இடம்பெறும் என்றார் அவர்.