தாய்மொழித் திறன் நிலையாக இருந்தாலும் தரம் குறித்து மாறுபட்ட கருத்துகள்

கொள்கை ஆய்வுக் கழக அறிக்கை

தாய்மொழித் திறன் நிலையாக இருந்தாலும் தரம் குறித்து மாறுபட்ட கருத்துகள்

3 mins read
7b8d9f8d-eb9d-42d6-ac55-87b93d7b481e
சிங்கப்பூரில் மொழி நிலை குறித்த மக்களின் கருத்துகளை உள்ளடக்கிய மூன்றாவது ஆய்வறிக்கையைக் கொள்கை ஆய்வுக் கழகம் திங்கட்கிழமை (மே 25) வெளியிட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் தாய்மொழித் திறன், பெரும்பாலும் நிலையாய் இருப்பதாகக் கூறப்பட்டாலும் அதன் தரம் குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

காலப்போக்கில் தாய்மொழியின் தரம் குறைந்துவிட்டதாக இளையர்கள், உயர் கல்வி கற்றோர், அதிக வருமானம் ஈட்டும் சிங்கப்பூரர்கள் கருதுவதற்கான சாத்தியம் அதிகரித்து வருவதாகக் கொள்கை ஆய்வுக் கழகம் திங்கட்கிழமை (மே 25) வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது.

‘சிங்கப்பூரில் மொழி அடையாளம், நிர்வாகம்: இனம், சமயம், மொழி குறித்த கொள்கை ஆய்வுக் கழகத்தின் அண்மைக் கண்டுபிடிப்புகள்’ என்பது ஆய்வின் தலைப்பு.

சிங்கப்பூரில் மொழி நிலை குறித்த மக்களின் கருத்துகளை உள்ளடக்கிய மூன்றாவது ஆய்வறிக்கை அது. இனம், சமயம், மொழி குறித்த ஆய்வுகளை ஏற்கெனவே 2013, 2018ஆம் ஆண்டுகளில் கழகம் மேற்கொண்டது.

அண்மைக் கருத்தாய்வு, 2024 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலும் நடத்தப்பட்டது. அதில் 4,000 சிங்கப்பூரர்களிடமிருந்து பதில்கள் திரட்டப்பட்டன. விரிவான, இன ரீதியான ஒப்பீடுகளை உறுதிசெய்யும் நோக்கத்துடன் கிட்டத்தட்ட 1,000 மலாய், இந்தியச் சிறுபான்மையினத்தவரின் கருத்துகளும் அவற்றில் அடங்கும்.

பங்கேற்பாளர்கள் சுயமாகத் தெரிவித்த வாய்மொழித் திறன், குறிப்பிடத்தக்க வகையில் வலுவாக இருப்பதை ஆய்வு வெளிப்படுத்தியது.

2024ல், கருத்தாய்வில் பங்கெடுத்த சீன இனத்தவரில் 80.9 விழுக்காட்டினரும் மலாய்க்காரர்களில் 93.2 விழுக்காட்டினரும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இந்தியர்களில் 92.9 விழுக்காட்டினரும் தங்களின் அதிகாரபூர்வத் தாய்மொழிகளை நன்றாகவோ மிக நன்றாகவோ பேசுவதாகக் குறிப்பிட்டனர்.

இருப்பினும், கடந்த பத்தாண்டுகளில் பேசப்படும் தாய்மொழியின் தரம் உண்மையிலேயே மேம்பட்டுள்ளதாக 36.5 விழுக்காட்டுச் சிங்கப்பூரர்கள் மட்டுமே கருதுகின்றனர்.

தாய்மொழித் தரம் குறைந்துவருவது குறித்த கவலை சீன இனத்தவர், இளையர்கள், அதிக வருமானம் ஈட்டுவோர் ஆகியோரிடம் மிக முக்கியமாகக் காணப்படுகிறது. அதற்கு மாறாக, மலாய், இந்திய இனத்தவரில் பாதிக்கும் மேற்பட்டோர், தாய்மொழித் தரம் இன்றைய நிலையில் முன்பைவிடச் சிறப்பாய் இருப்பதாக மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆங்கிலம் பேசுவதைப் பொறுத்தவரை, தரம் மேம்பட்டுள்ளதாக 62.4 விழுக்காட்டினர் நம்புகின்றனர். 2013ல் 71.9 விழுக்காடாக இருந்த ஆங்கில வாய்மொழித் திறன், 2024ல் பத்தாண்டு காணாத உச்சத்தை எட்டியது. 81.5 விழுக்காட்டினர், ஆங்கிலத்தை நன்றாகவோ மிக நன்றாகவோ பேசுவதாகக் கூறியுள்ளனர்.

ஆங்கிலம் பேசும் திறன், வயது அடிப்படையில், பெரிதும் வேறுபடுகிறது. 65 வயதுக்கு மேற்பட்டோரில் பத்தில் ஆறு பேர் (62.2 விழுக்காடு) மட்டுமே அதிகத் திறன் கொண்டிருப்பதாகக் கூறிய நிலையில், 18 முதல் 35 வயதுக்குட்பட்டோரில் ஏறக்குறைய அனைவரும் (97.3 விழுக்காடு) அதிகத் திறன் கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர். மேலும் ஆங்கில மொழி, வேலையிடத்திலும் (85.6 விழுக்காடு), சமூகச் சூழல்களிலும் (80.8 விழுக்காடு) ஆதிக்கம் செலுத்துகிறது.

தாய்மொழியை அடையாளமாகக் கருதுவோரின் விகிதம் 2013ல் 65.1 விழுக்காடாக இருந்தது. 2024ல் அது 50.4 விழுக்காட்டுக்குச் சரிந்தது. இருப்பினும் கருத்தாய்வில் பங்கேற்றோரில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினர், உள்ளூர், அனைத்துலக வர்த்தகத்தில் அதிகாரபூர்வத் தாய்மொழியைப் பேசுவது வலுவான அனுகூலத்தை அளிப்பதாகக் கூறினர்.

“சிங்கப்பூரில் தாய்மொழிகளுக்கான மதிப்பு தொடர்கிறது. ஆனால் ஆங்கிலம், சிங்கிலிஷ் மூலமாகவே நமது அடையாளம் அதிக அளவில் தீர்மானிக்கப்படுகிறது,” என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மொழி, ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தோடு ஆசியாவில் சிங்கப்பூரின் கலாசார வேர்களையும் வடிவமைக்கிறது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் ஆகியவற்றில் திறன்களை ஊக்குவிப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவும் மிதமாகக் கூடியுள்ளது.

அதற்கு 2024ல் 60.3 விழுக்காட்டு சிங்கப்பூரர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஒப்புநோக்க, 2018ல் அது 53.5 விழுக்காடாக இருந்தது.

இந்தியச் சமூகத்தினரும் (64.6 விழுக்காடு) முதியோரும் அத்தகைய அரசாங்க ஆதரவை வலுவாக வலியுறுத்துவதும் ஆய்வில் தெரியவந்தது.

குறிப்புச் சொற்கள்