நோன்பு மாதத்தில் ஈரான், லெபனான் தாக்குதல்கள் சிங்கப்பூரை பாதித்துள்ளது

நோன்பு மாதத்தில் ஈரான், லெபனான் தாக்குதல்கள் சிங்கப்பூரை பாதித்துள்ளது

2 mins read
அமைதி என்பது மிகவும் பலவீனமானது. எந்த நேரத்திலும் அது சுழன்று பதற்றங்கள் ஏற்படலாம்: நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹொன் வெங்
b658bfd5-771d-46a7-bb8c-98906f7720f7
சனிக்கிழமை (பிப்ரவரி 28) ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு புகை கிளம்பும் காட்சி. - படம்: ஏஎஃப்பி

இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடிக்கும் மாதத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானையும் லெபனானையும் தாக்கியுள்ளது சிங்கப்பூருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சர் முகம்மது ஃபைஷால் இப்ராஹிம் சனிக்கிழமை (பிப்ரவரி 28) கவலை தெரிவித்துள்ளார்.

சமரசப் பேச்சுவார்த்தைகளின் தோல்வி, மத்தியக் கிழக்கில் வாழும் பொதுமக்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் கருத்துரைத்தார்.

நிலவரத்தை உன்னிப்பாக சிங்கப்பூர் கவனித்து வருவதாகக் கூறிய அமைச்சர் ஃபைஷால் புனித ரமதான் மாதத்தில் தாக்குதல் நடப்பது பலருக்கு வேதனையளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். போர் தொடராமல் நிலைமையை கட்டுக்குள் வைக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கான ஆதரவை சிங்கப்பூர் வழங்கும் என்றும் அவர் கூறினார்.

கம்போங் கிளாம் தொகுதியில் நோன்புத் துறப்பு நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு இணைப் பேராசிரியரான ஃபைஷால் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனைத் தெரிவித்தார். மத்தியக் கிழக்கில் அமைதி ஏற்படவேண்டும் என்று வலியுறுத்திய அவர், பாலஸ்தீனர்களின் பிரச்சினை குறித்தும் தமது கவலையை வெளிப்படுத்தினார்.

நம்பிகை, ஒற்றுமை ஆகிய நற்பண்புகளை சிங்கப்பூரர்கள் அனைவரும் தொடர்ந்து கட்டிக்காக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இயோ சூ காங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹொன் வெங், ஈரானில் நடக்கும் தாக்குதல் குறித்து தாம் மிகவும் கவலையுறுவதாக தமது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

தற்காப்பு, வெளியுறவு ஆகிய துறைகளுக்கான நாடாளுமன்ற குழுத் தலைவரான அவர், “அமைதி என்பது மிகவும் பலவீனமானது. எந்த நேரத்திலும் அது சுழன்று பதற்றங்கள் ஏற்படலாம் என்பதை மத்தியக் கிழக்கில் நடக்கும் சம்பவங்கள் நினைவூட்டுகின்றன,” என்று குறிப்பிட்டார்.

“உயிர், உடமைகள், இல்லங்கள், பாதுகாப்பை இழந்து,பொதுமக்களே போரில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சிங்கப்பூரின் அமைதியையும் ஒற்றுமையையும் நாம் அலட்சியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. சர்ச்சைகள் நிறைந்த உலகில் சிங்கப்பூரின் இன, மத தேசிய நல்லிணக்கம் அரிதான ஒன்றாக அமைகின்றது,” என்று திரு யிப் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்