ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம்: சிங்கப்பூர் தரப்புகளுக்கும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம்

2 mins read
053d9492-10e0-41a7-bc72-564797b263be
பிரானி தீவு. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஈரானுடன் கச்சா எண்ணெய் தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும், சிங்கப்பூரின் கடல்துறையுடன் தொடர்புடைய குறைந்தது 10 தரப்புகளை அமெரிக்கா அடையாளம் கண்டுள்ளது.

மொத்தம் 70 தனிநபர்கள், நிறுவனங்கள்/குழுக்கள், கப்பல்களை உள்ளடக்கிய பட்டியலில் அந்த 10 தரப்புகளும் இடம்பெற்றுள்ளன. ஈரானிய பெட்ரோல், பெட்ரோல் ரசாயனப் பொருள்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவது, எண்ணெய் மற்றும் எல்பிஜியை (liquified petroleum gas) ஈரானிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்ப வகைசெய்வது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சும் அமெரிக்க நிதி அமைச்சும் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் அவற்றை அடையாளம் கண்டன.

இந்நடவடிக்கைகள் ஈரானிய அரசாங்கத்துக்கு நூறு மில்லியன்கணக்கான டாலர் வருவாயை ஈட்டித் தருவதாக அமெரிக்க அரசாங்கம் கூறுகிறது.

கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆக அண்மையப் பட்டியலில் சிங்கப்பூரில் செயல்படும் மூன்று தரப்புகள் இடம்பெறுகின்றன. அவை, கடல்துறைச் சேவைகளை வழங்கும் ஸ்ட்ராச லிங்க் (Strasse Link) நிறுவனம், அதன் நிர்வாக இயக்குநர் ஃபாட்ஸ்லோன் அகமது, மூத்த செயல்பாட்டு நிர்வாகி முகம்மது டானியல் ஃபாட்ஸ்லோன் ஆகியோர் அந்தத் தரப்பினர் ஆவர். திரு ஃபாட்ஸ்லோன், திரு டானியல் இருவரும் சிங்கப்பூரர்கள்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் ஈரானின் ஆதரவில் செயல்படும் கப்பல்களுக்கு மாலுமிச் சேவைகளை வழங்கியதாக ஸ்ட்ராச லிங்க் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஈரானிய கச்சா எண்ணெய்யை ஏற்றிச் சென்ற அக்கப்பல்கள் மலாக்கா நீரிணை வழியாகச் சென்று சிங்கப்பூருக்கு அப்பால் உள்ள கடற்பகுதிகளில் வேறு கப்பல்களுக்கு எண்ணெய்யை மாற்றிவிட்டன.

மற்றபடி அன்போ ‌ஷிப்பிங், ஆங்கிலோ பிரிமியர் ‌ஷிப்பிங் மற்றும் அதன் கப்பல் ஏபிஎஸ் 9, லோகோஸ் மரின் மற்றும் அதன் கப்பல் பயனியர் 92, இந்தியாவைச் சேர்ந்த திருவாட்டி பூனம் கசாட் மற்றும் திரு குணால் கனாயாலாட் கசாட் ஆகிய சிங்கப்பூர் தரப்புகளும் தடை உத்தரவுகள் பிறப்பிப்பதற்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்