இறுதிச் சடங்குச் சேவை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து $3 மில்லியன் வசூலித்த ‘ஐராஸ்’

2 mins read
609995a4-1565-490c-829d-0ca21d5a0335
படம்: - பிக்சாபே

கடந்த ஐந்து ஆண்டுகளில் இறுதிச் சடங்குச் சேவையில் ஈடுபடும் 49 நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவை, அபராதம் என கிட்டத்தட்ட 3 மில்லியன் வெள்ளிக்கும் (US$2.2 மில்லியன்) அதிகமான பணத்தை அந்நிறுவனங்களிடமிருந்து வசூலித்ததாகச் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (ஐராஸ்) தெரிவித்துள்ளது.

இறுதிச் சடங்குச் சேவையிலும் அதனுடன் தொடர்புடைய மற்ற சேவைகளான சமயச் சடங்கு, உணவு ஏற்பாடு போன்றவற்றில் ஈடுபடும் நிறுவனங்கள்மீது வரி ஏய்ப்புத் தொடர்பான விசாரணை 2019ஆம் ஆண்டு தொடங்கியதாக ஆணையம் கூறியது.

மேலும், வரிப் பதிவுகளில் உள்ள முரண்பாடுகளுக்காக 65 நிறுவனங்களைத் தணிக்கை செய்து விசாரணை மேற்கொண்டதாகவும் மூன்று நிறுவனங்களின் உரிமையாளர்கள்மீது வழக்குத் தொடுத்துள்ளதாகவும் ஆணையம் குறிப்பிட்டது.

செப்டம்பர் மாதத்தில், ‘டைரக்ட் சிங்கப்பூர் ஃபியூனரல் சர்வீசஸ் & எம்பாமிங்’ நிறுவனத்தின் உரிமையாளர் ரோலண்ட் டேக்கு $12,000 அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், வரி ஏய்ப்புக்காக $529,000க்கும் அதிகமான அபராதம் செலுத்த வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டதாகவும் கூறப்பட்டது.

இறுதிச் சடங்குச் சேவை வழங்கும் நிறுவனங்கள் பொதுவாக குடும்ப உறுப்பினர்கள் இணைந்து நடத்தும் வர்த்தகம் என ஆணையத்தின் விசாரணை, தடயவியல் பிரிவின் துணை இயக்குநர் அமீரா கோ கூறினார்.

“அவற்றின் தொழில் நடைமுறை பெரும்பாலும், கணிசமான பணப் பரிவர்த்தனைகள் பதிவுகளைச் சரியாகப் பராமரிக்காமல் இருத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது,” என்றார் அவர்.

“இதனால், அவற்றின் உரிமையாளர்கள் தவறான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய நேரிடலாம். மேலும், பொருள் சேவை வரியைச் சரியான நேரத்தில் பதிவுசெய்யத் தவறக்கூடும்,” என ஆணையம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்