தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
பங்ளாதேஷிய சமய போதகர் நடத்திய சட்டவிரோத சொற்பொழிவு எதிரொலி

வெளிநாட்டு ஊழியர்களை ஈடுபடுத்தும் நிகழ்வுகள் நடத்தப்படும்

2 mins read
37f8e3dc-97a3-4de3-a739-3cb2a71b16b3
துவாசில் உள்ள ‘லந்தானா லாட்ஜ்’ ஊழியர் தங்குவிடுதியில் ஆகஸ்ட் 9ஆம் தேதி அமீர் ஹம்ஸா பிரசங்கத்தை நடத்தினார். - படம்: சாவ் பாவ்

வெளிநாட்டு ஊழியர்களை ஈடுபடுத்தும் நிகழ்வுகளுக்கு தான் திட்டமிட்டுள்ளதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) தெரிவித்தது.

இது தொடர்பில் சிஎன்ஏவின் கேள்விகளுக்குப் பதிலளித்த உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, முன்னதாக இந்த மாதம் பங்ளாதேஷிய சமய போதகர் அமிர் ஹம்ஸா நடத்திய சட்டவிரோத சொற்பொழிவுக் கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் இத்தகைய நிகழ்வுகள் உள்ளடக்கும் எனக் கூறியது.

அமிர் போன்ற வெளிநாட்டு சமய போதகர்கள் முன்வைக்கும் தீவிர, பிரிவினைவாதப் போதனைகளின் ஆபத்துகள் குறித்து வெளிநாட்டு ஊழியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தகைய நிகழ்வுகளின் நோக்கம் என உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை விளக்கியது.

மனிதவள அமைச்சுடனும் சமய மறுவாழ்வுக் குழு போன்ற பங்காளித்துவ அமைப்புகளுடனும் சேர்ந்து பணியாற்றவுள்ள உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, வரும் வாரங்களில் அந்த நிகழ்வுகளை நடத்தும்.

சமய கோட்பாடுகள், ஆலோசனைச் சேவை குறித்து தெளிவு பெற விரும்புவோருக்காக கூடுதல் வளங்களாக, சமய மறுவாழ்வுக் குழுவின் வளங்கள், ஆலோசனை மையத்தின் மூலம் கிடைக்கப் பெறலாம் என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

பயங்கரவாதம் தொடர்பிலான நடவடிக்கைகளுக்காக 2021ல் பங்ளாதேஷ் அரசாங்கத்தால் அமீர் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணையை முன்னிட்டு, கடந்த ஆண்டு டிசம்பரில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

வேறொரு பெயர் தாங்கிய கடப்பிதழைப் பயன்படுத்தி அவர் சிங்கப்பூர் வந்தார்.

துவாசில் உள்ள ‘லந்தானா லாட்ஜ்’ ஊழியர் தங்குவிடுதியில் ஆகஸ்ட் 9ஆம் தேதி அமீர் உரையாற்றினார். மறுநாள் ஆகஸ்ட் 10ஆம் தேதி சிங்கப்பூரைவிட்டு வெளியேறிய அவரைப் பற்றிய புகார்கள் காவல்துறைக்கு ஆகஸ்ட் 12ஆம் தேதி கிடைத்தன.

இந்நிலையில், அனுமதியின்றி சொற்பொழிவுக் கூட்டம் நடத்தியதற்காக அமீரிடம் தான் விசாரணை நடத்தி வருவதாக உள்துறை அமைச்சு கூறியது. அக் கூட்டத்தின் ஏற்பாட்டாளரிடமும் அதில் சம்பந்தப்பட்ட மற்றவர்களிடமும் அமைச்சு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்